Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

சோறு மாற்றுத் திருவிழா

Food Exchange Festival

வகை

கிராமக் கோயில்


திருவிழாவின் பயன்

வேளாண்மைக்குத் தயாராகின்றனர். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல். சாதி மத ஒற்றுமை ஓங்குகிறது. குடிகளுக்கிடையே சோறும் நீரும் பகிரப்படுகிறது.


நடைபெறும் இடம்

மந்தையம்மன் கோயில் - கழுதைப்பாறைப்பட்டி


நடைபெறும் தருணங்கள்

ஒவ்வோர் ஆண்டும் ஆடிமாதம்


ஊர்

கழுதைப் பாறைப் பட்டி

மாவட்டம்

மதுரை

பாலினம்
பொது
விழாவின் வரலாறு / கதை

முன்னொரு காலத்தில் இவ்வூரில் பஞ்சம் ஏற்பட்டுக் கால்நடைகள் இறக்கத்தொடங்கின. எனவே, மக்கள் புலம்பெயர வேண்டியிருந்தது. இவ்வாறு பஞ்சம் போன்றவற்றிலிருந்து எளியோரைக் காப்பதற்கு உருவாக்கப்பட்ட விழாதான் இந்தச் ’சோறு மாற்றுத் திருவிழா'. ”பஞ்சம் போக்கக் கஞ்சித் தொட்டி” என்பது பிற்கால வழக்கு. ஆனால், அவ்வழக்கு வருவதற்கு முன்பே இந்தச் ’சோறு மாற்றுத் திருவிழா’ நடக்கத் தொடங்கியிருக்க வேண்டும் என்று ஊர் மக்கள் நம்புகின்றனர்.

விரத முறைகள்

காலையிலிருந்து உண்ணாமல் இருக்கின்றனர்.

பலியிடல்

ஆடு, கோழி

நேர்த்திக்கடன்

பெரிய கலத்தில் சோறு விளக்கு வைத்துக் கோவிலிற்கு வருகிறேன் என்று வேண்டிக் கொள்கின்றனர்.

குறி சொல்லும் முறை
சாமியாடி நன்செய் புன்செய் செழிக்கப் படையல் வைக்கிறோம் என அருள் வாக்குச் சொல்கிறார்.
பொறுப்பாளர்
தனிநபர் / குடும்பம்
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்

கொட்டு மேளம், நாயனம், ஆடல் பாடல் ஆகியன உண்டு

நிகழ்ச்சிநிரல் விவரங்கள்

செக்கானூரணி, கழுதைப் பாறைப்பட்டியில் உள்ள மந்தையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் இந்த விழா நடைபெறுகிறது. ஆடி மாதம் உழுவதற்குச் சில நாட்கள் முன்பாகப் பெரும்பாலும் இந்த விழாவை ஊர்மக்கள் நடத்துகின்றனர். பிற்பகல் 3 மணி முதல் சாமியாடி மேளம் அடித்து ஊர் திரண்டு வந்து, சோறு, குழம்பு ஆகியவற்றைத் தனித்தனிப் பானைகளில் எடுத்துக்கொண்டு அவற்றின் மீது சிறிய விளக்கை ஏற்றி மந்தையம்மன் கோவிலின் உள்ளே வைக்கின்றனர். பெரும்பாலும் நூற்றுக்கு மேற்பட்டை பானைகள் இருப்பதைப் பார்க்க முடியும். ஆடு, கோழி வைத்திருப்பவர்கள் அவற்றை வெட்டிக் கறி சமைத்துச் சில பானைகளில் கொண்டு வந்து வைப்பர். ஆடு, கோழி ஆகியவற்றின் தலை, கால், ஈரல் ஆகியவற்றைச் சாமிக்கு வைத்துவிடவேண்டும். மாலை 4 மணிக்குப் பூசாரி அம்மனை வணங்கி மாட்டுத் தொழுவத்தில் சாமியாடுவார். சாமியாடிக்கொண்டே கொட்டு முழங்க நாயனம் ஊதப் பானைகள் புடை சூழக் கோவிலுக்கு வருவார். பூசாரி பூசை செய்து சாமிக்கு மண் கலயங்களில் இருக்கும் உணவைச் சிறிது எடுத்து இலையில் படையல் வைப்பார். தேங்காய் பழம் வைத்து அபிசேகம் முடிந்த பிறகு, சலவைத்தொழிலாளிகள் கொண்டு வரும் மாற்றுத்துணி எனப்படும் இரண்டு - மூன்று வெள்ளை வேட்டிகளில் பானைக்கலங்களில் இருக்கும் சோற்றையும் குழம்பையும் ஒன்றாகத் தட்டுவர். எளியோர் அனைவரும் தாங்கள் வைத்திருக்கும் பாத்திரங்களில் உணவை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்று உண்பர்.

சிறப்பம்சங்கள்

நூற்றுக்கணக்கான மண் கலயங்களில் சோறு, குழம்பு இட்டு விளக்கேற்றி மக்கள் ஊர்வலமாக வருகின்றனர்.

விழாவின் தொன்மை
பதினெட்டாம் நூற்றாண்டுப் பஞ்சங்களின் விளைவாக, நூறாண்டுகளுக்கு மேலாக இவ்விழா நடைபெறுகிறது.
தகவல்

முனைவர் இரத்தினகுமார்

புகைப்படங்கள்

அருண்குமார்

அருண்குமார்