கிடாரிப்பட்டி- அழகர்மலை பாறை ஓவியம்
No data available
கூடுதல் விவரங்கள்
அழகர்கோவில் வளாகத்தில் உள்ள பஞ்ச பாண்டவர் குகையின் விதானத்தின் மேற்குப்பக்கத்தில் சில ஓவியங்கள் ஆங்காங்கே சிவப்பு வண்ணங்களில் வரையப்பட்டுள்ளன. அவை புதிய கற்காலம் / பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்களாகும். இங்கு மொத்தம் 13 இடங்களில் பாறை ஓவியங்கள் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அவற்றுள் சில சிதிலமடைந்து விட்டன. இவ்வோவியங்களில் தனியாக மனித உருவங்களும், விலங்கு உருவங்களும், மனிதனும் விலங்குகளும் சேர்ந்துள்ள உருவங்களும், சில குறியீடுகளும் காணப்படுகின்றன. இங்குள்ள அனைத்து ஓவியங்களும் கோட்டோவியமாகவே உள்ளன. இரு முக்கோண வடிவைக் கொண்ட மனித உருவங்கள் இங்குக் காணப்படுகின்றன. அதே போலக் கோட்டோவியத்தில் உட்புறம் வண்ணங்கள் கொண்டு நிரப்புவதற்குப் பதில் சிறுகோடுகளால் உடம்பின் உட்புறங்கள் நிரப்பப்பட்டுள்ளன. கலைமான் உருவம் இரண்டு இடங்களில் காணப்படுகிறது. இது வேட்டைச் சமூகத்தின் குடியிருப்பை உணர்த்துவதாகக் கருதலாம். மற்றோர் ஓவியத்தில் குதிரை அல்லது யானை போன்ற ஒரு விலங்கின்மீது கோடரியேந்தியபடி ஒரு மனித உருவம் அமர்ந்திருப்பது காணப்படுகிறது. இக்குகையில் பொ.ஆ.மு 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கற்படுக்கைகளும், தமிழ்ப் பிராமிக் கல்வெட்டும், 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணச் சிற்பமும், வட்டெழுத்தும் கல்வெட்டும் காணப்படுகின்றன. கிடாரிப்பட்டி பகுதியில் சமணர் வருகைக்கு முன்பே இனக்குழுச் சமூகங்கள் வாழ்ந்துவந்ததை, இப்பாறை ஓவியங்கள் தெரிவிக்கின்றன.
தகவல்
முனைவர் துர்கா தேவி
மீடியா கோப்புகள் இல்லை