Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

சாலிமரத்தண்டு

Saalimarathandu

கோயிலின் வேறு பெயர்

சாலிமரத்தடி சிவன்


பிற தெய்வத்தின் பெயர்கள்

ஆதிசிவன்


தலத்தின் சிறப்பு

கோயில் சாமி மாடு முதன்மையாக வணங்கப்படுகிறது.


ஊர்

தேன்கல்பட்டி

மாவட்டம்

மதுரை

மூலவர் பெயர்
சாலிமரத்தண்டு
தல மரம்
சாலிமரம்
கோயில் குளம்/ஆறு
கிணறு
திருவிழாக்கள் விவரங்கள்
மாசி, தை மாதங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
மாட்டுக்குத் தீபம் காட்டுதல், புத்தாடை அணிவித்தல்
கோயில் அமைப்பு
பெரிய பீடம் ஒன்றில் சாலிமரத்தைக் குறிக்கும் விதமாக ஒரு தூண் உள்ளது.
சுருக்கம்
ஆதிசிவன் கோயிலுக்கு நேர்த்திக்கடனாகச் சல்லிக்கட்டுக் காளைகள் நேர்ந்துவிடப்படுகின்றன. வேண்டுதல் நிறைவேற யார் வேண்டுமானாலும் ஆதிசிவனை வணங்கிக் காளையை நேர்ந்துவிடலாம். அப்படி விடப்படும் மாடுகள் தேன்கல்பட்டியில் உள்ள சாலிமரத்தின் அருகில் பராமரிக்கப்படுகின்றன. இதைப் பராமரிப்பதற்கு மானியம் உண்டு. மாடுகள் நீர் அருந்த அருகிலே ஒரு கிணறு வெட்டப்பட்டுள்ளது. வேப்பமரங்கள் சூழச் சாவடியும் கட்டப்பட்டுள்ளது. மாட்டுப் பொங்கலுக்குத் தேன்கல்பட்டி, கொக்குளம், பாறைப்பட்டி, சிக்கம்பட்டி ஆகிய ஊர்களுக்கு மாடுகளை அழைத்துச் சென்று ஆடை, பணம், இன்னபிற பொருட்களை வாங்கி வருகின்றனர். இதைப் பராமரிப்பதற்கென்று ஒருவர் ஊரில் நியமிக்கபட்டிருக்கிறார். அவர் சாமி மாட்டிற்கான மானியத்தையும், வருவாயையும் பராமரிப்பார். மாசிப்பச்சைக்கு மாடுகளைக் குளிப்பாட்டிப் புத்தாடை போர்த்திப் பெரிய மாலை அணிவித்து ஆதிசிவன் கோயிலுக்கு அழைத்துச் சென்று அங்குக் கட்டி வைக்கின்றனர். எனவே, சாமி மாடு என்பது வேளாண்மையின் செழிப்பைப் பெருக்குவதற்காகச் சிவன் கோயிலில் வளர்க்கப்படுகிறது. சாமிமாடு மரித்துவிட்டால் இறந்த மாட்டை ஒரு மாட்டு வண்டியில் ஏற்றி நிறைய மாலைகள் போட்டு இறுதி ஊர்வலம் மிகச் சிறப்பாக நடத்தப்பெறுகிறது. அந்நாளை மக்கள் துக்கநாளாகக் கருதுகின்றனர். தேன்கல்பட்டியிலிருந்து மேலக்கால் செல்லும் வழியில் இடப்புறம் உள்ள சிவன் கோயிலுக்கு அருகே உள்ள தனிச்சுடுகாட்டில் தனியாகச் சாமி மாட்டைப் புதைக்கின்றனர். மக்கள் கூடி இறுதி மரியாதை செய்கின்றனர்.
கூடுதல் விவரங்கள்
ஆதிசிவன் கோயிலில் சாமிமாட்டின் மிகப் பெரிய சிலை ஒன்று வடிக்கப்பட்டுள்ளது. இச்சிலை நந்தி அல்ல. இக்கோயில் ஆதிசிவன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. எனினும், மூலவராக லிங்கத்தை வழிபடாமல் அய்யனார்தான் வழிபடுகின்றனர். இந்தப் பகுதியில் வைதீகச் சிவன் கோயில் பரவுவதற்கு முன்பே ஐயன் மற்றும் செவன் (மூப்பர்) வழிபாடு இருந்திருக்கிறது எனவும், அதனால் செவன், செவனம்மாள் என்ற பெயர்கள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன என்றும் இங்குள்ளோர் கூறுகின்றனர்.
காலம்/ ஆட்சியர்
சுமார் 300 ஆண்டுகள் பழைமையான கோயிலாகக் கருதப்படுகிறது.
தகவல்

முனைவர் இரத்தினகுமார்

குறிப்புகள்
தகவல் - விமலா. கடைக்காரர், தேன்கல்பட்டி.
செல்லும் வழி
செக்கானூரணியிலிருந்து தேன்கல்பட்டி செல்லும் வழியில் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
செக்கானூரணி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
நாகமலைப் புதுக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
செக்கானூரணி

மீடியா கோப்புகள் இல்லை

No media Files