மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில்
Moongilanai Kamatchi Amman Temple
தலத்தின் சிறப்பு
வையாபுரி புலவர் பாடிய காமாட்சி அம்மன் பதிகம் இத்தலத்தின் சிறப்பாகும். மேலும் இக்கோயிலில் அடைத்த கதவிற்கு முன்பாகவே பூசை செய்யப்படுகிறது. கோயிலின் குச்சுவீடு கலசத்தின் (கருவறை கலசத்தின்) தரிசனம் சிறப்பான ஒன்றாகம். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் போன்றே இங்கும் பூசை மண்டபத்தின் முன்பு கௌளி சின்னம் (பல்லியின் சின்னம்) பொறிக்கப்பட்டுள்ளது. இங்கும் கௌளி குறி கேட்டல் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
மூலவர் பெயர்
மூங்கிலணை காமாட்சி அம்மன்
ஊர்
தேவதானப்பட்டி
மாவட்டம்
தேனி
தல மரம்
மூங்கில்
கோயில் குளம்/ஆறு
மூங்கில் ஆறு
பூசைக்காலம்
நாள்தோறும் 1. காலைச் சந்தி 2. உச்சிக்காலம் 3. சாயரட்சை ஆகிய மூன்று காலப் பூசை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
ஒவ்வொரு ஆண்டும் தை மாத இரத சப்தமியன்று கோயிலில் காமக்காள் திவசம் கொடுக்கப்படுகிறது. திவசம் முடிந்த அன்றே கோயிலின் ஆண்டுத் திருவிழாவிற்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது. மகா சிவராத்திரியை முதல் நாளாகக் கொண்டு எட்டு நாட்கள் திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் திருவிழா தேனி மாவட்டத்திலுள்ள கோயில்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இத்திருவிழாக் காலமான எட்டு நாட்களும் கோயிலுக்குத் தனிப் பேருந்து வசதிகள் செய்யப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் ஆடித் திங்களில் முதல் மூன்று நாட்கள் ’ஆடிப்பள்ளயத் திருவிழா’ நடைபெறுகிறது. இவ்விழாவில் ராஜகம்பளம் நாயக்கர் சமுதாயத்தின் “தேவராட்டம்” நிகழ்வு சிறப்பாக இருக்கும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
கோயிலில் நெய்விளக்கு தீபம் மட்டுமே ஏற்றப்படுகிறது, உடைக்காத தேங்காய் உரிக்காத வாழைப்பழம் நிவேதிக்கப்படுகிறது. திருவிழாக் காலத்தில் கோயிலில் அம்மனுக்குக் காணிக்கையாகச் செலுத்தப்படும் நெய் சேகரிப்புக்காக சுமார் ஐம்பது மண்பானைகள் வைக்கப்படுகின்றன. இவையனைத்தும் எட்டு நாட்கள் திருவிழாவில் நிரம்பி விடுகின்றன.
தேவதானப்பட்டியைச் சுற்றிலுமுள்ள சில கோயில்களுக்கு இங்கிருந்து நெய் மற்றும் நைவேத்தியப் பொருட்கள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.இவ்வழிபாட்டு முறை வேறு எந்த கோயிலிலும் இல்லாத ஒரு சிறப்பாகும். அம்மனுக்கு புடவை சாத்தப்படுகிறது மற்றும் முடி காணிக்கையாகக் கொடுக்கப்படுகிறது. வருடத்திற்கு ஒருமுறை கோயிலின் குச்சு வீடு கலசத்திற்குக் கூரை வேயப்படும் போது ராஜகம்பளம் மக்கள் தங்கள் கண்களைத் துணியால் கட்டிக் கொண்டுதான் காமாட்சிப் புல்லால் கூரை வேய்கின்றனர்.
காலம்/ ஆட்சியர்
சுமார் 800 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானதாகக் கருதப்படுகிறது
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
சோன முத்தையா, இலாடச் சன்னாசி
தல வரலாறு / கதைகள்
புராணத்தில் இவ்வூருக்கு தெய்வனாம்பதி என்ற பெயர் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. முன்னொரு காலத்தில் அசுரன் வச்சிரதந்தனை வதம் செய்துவிட்டு அம்மன், இம்மூங்கில்தோட்டத்தில் தவமிருந்த இடம் “அம்மா மச்சு” என்று அழைக்கப்படுகிறது.
செவிவழிச் செய்தியாக வேறு ஒரு கதையும் சொல்லப்படுகிறது. ஒருமுறை அசரீரியாக ஒரு பெண்ணின் குரல் காட்டில் ஒலித்தது. அப்பெண் மஞ்சளாற்றில் வெள்ளம் வரும்போது மூங்கில் புதரைக்கொண்டு அணையிட்டு, மிதந்துவரும் மூங்கில் பெட்டியை நிறுத்தி அதை அம்மனாக வழிபடச் சொன்னார். அவ்வாறே இப்பகுதி மக்களும் செய்தனர்.
கோயில் அமைப்பு
இங்குக் கருவறையின் மேல் விமானம் எதுவும் இன்றித் தர்ப்பைப் புல்லால் வேயப்பட்ட ஒரு கூரை மட்டும் உள்ளது. கோவிலைச்சுற்றிப் பெரிய திருச்சுற்று காணப்படுகிறது
தகவல்
முனைவர் மாணிக்கராஜ்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
அருள்மிகு பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயில்
செல்லும் வழி
காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து கெங்குவார்பட்டி செல்லும் சாலையில்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வத்தலக்குண்டு, பெரியகுளம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
திண்டுக்கல், மதுரை, தேனி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
வத்தலக்குண்டு, பெரியகுளம்
மீடியா கோப்புகள் இல்லை
No media Files