நின்ற நாராயணப் பெருமாள் கோயில்
Nindra Narayana Perumal Temple
தலத்தின் சிறப்பு
இக்கோயில் 108 வைணத் திருதலங்களில் ஒன்றாகும். பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோரால் மங்களா சாசனம் (ஆழ்வார்கள் இறைவனைப் போற்றிப் பாடுவது) செய்யப்பட்ட கோவிலாகும்.
மூலவர் பெயர்
நின்ற நாராயணப் பெருமாள்.
தல மரம்
-
கோயில் குளம்/ஆறு
தெப்பக்குளம்
திருவிழாக்கள் விவரங்கள்
வைகாசி விசாகம் மற்றும் ஆவணித் திருநாள் கொண்டாடப்படுகிறது.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 8 மற்றும் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது, முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்கள்
கல்வெட்டு / செப்பேடு
வட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கல்வெட்டு உள்ளது. இங்கு முதலாம் வரகுணன், பராந்தக சோழன், முதற் குலோத்துங்கன்; ஸ்ரீவல்லபன், முதலாம் சடையவர்மன் குலசேகரன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் மாறவர்மன் குலசேகரன் போன்ற மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன.
சுவரோவியம்
கருவறைக்கு வெளியில் நின்ற நாராயணப் பெருமாள், திருவில்லிப்புத்தூர் ஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார், கருடன், எத்திராஜர் போன்ற சுவரோவியங்கள் காணப்படுகின்றன.
சிற்பங்கள்
திருமங்கை ஆழ்வார் செப்புத் திருமேனி, சமீன்தார் ரெங்கசாமியின் சிலை.
தல வரலாறு / கதைகள்
திருத்தங்கல் என்ற இவ்வூர் சங்கக் காலப் பாண்டியர்களின் தலைநகராக விளங்கிய மதுரையிலிருந்து சேரநாட்டிற்குச் செல்லும் பெருவழியாக அமைந்திருந்தமையைச் சிலப்பதிகாரம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. மேலும், சிலப்பதிகாரம், நற்றிணை (பாடல் 313 மற்றும் 386) மற்றும் குறுந்தொகை (பாடல் 217) ஆகியவை ’திருத்தங்கல்’ பகுதியை அறிவிற் சிறந்தவர்கள் வாழ்ந்த பகுதி என்று சுட்டிக் காட்டுகின்றன. ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் இருந்த பெருமாள், ஆண்டாளின் பக்தியால் ஈர்க்கப்பட்டார். ஆண்டாளைக் காணத் திருவில்லிப்புத்தூர் திவ்ய தேசத்தை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினார். அந்த இடத்தை அடையும் முன் இருளாகிவிட்டது. ஒரு குன்றின் மேல் இரவைக் கழிக்க முடிவு செய்தார். அவர் இத்தலத்தில் தங்கியதால் இவ்விடத்திற்குத் ’திருத்தங்கல்’ என்றும், அக்குன்றுக்குத்’தாளகிரி’ என்றும் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
கோயில் அமைப்பு
இக்கோயிலில் கருவறை, அரைமண்டபம், மகாமண்டபம், திருச்சுற்று, அம்மன் கோயில், நரசிம்மர் சந்நிதி, 'சுக்கிரவாரக்குறடு' மண்டபம் ஆகியவை உள்ளன.
சுருக்கம்
முற்காலப் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் பிற்காலப் பாண்டியர் காலத்தில் முற்றிலுமாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார் போன்ற ஆழ்வார்கள் இவ்விறைவனைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.
பிற்காலப் பாண்டியரான முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் (பொ.ஆ. 13ஆம் நூற்றாண்டில்) அவனது அதிகாரி, 'சோரன் உய்யநின்றாடுவான் குருகுலத்தரையன்' என்பவன் கருவறை, அரைமண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றை எடுப்பித்து இக்கோவிலைக் கற்றளியாக்கியதாகக் கல்வெட்டுகளின் வழி அறிய முடிகின்றது. முதலாம் மாறவர்மன் குலசேகரனின் காலத்தில் இக்கோவிலுக்கான திருச்சுற்று எழுப்பப்பட்டுள்ளது.
அம்மன் கோவிலும் நரசிம்மருக்கான தனிச் சந்நிதியும் இம்மன்னன் காலத்தில்தான் கட்டப்பட்டுள்ளன. பிறகு நாயக்கர் காலத்தில் இவை புதுப்பிக்கப்பட்டன. நாகலாபுரம் சமீன்தார் ரெங்கசாமி நாயக்கர் என்பவர் வெள்ளிக்கிழமை பூசை நடைபெறுவதற்காகச் 'சுக்கிரவாரக்குறடு' என்ற மண்டபத்தைப் பொ.ஆ. 19ஆம் நூற்றாண்டில் கட்டிக் கொடுத்துள்ளார். அவரது உருவச்சிலையும் இம்மண்டபத்தில் காணப்படுகின்றது.
கூடுதல் விவரங்கள்
இங்குக் காணப்படும் கல்வெட்டுகள் மூலம் திருத்தங்கல் கிராமம் பிரம்மதேயக் கிராமமாக விளங்கியுள்ளது என்பதும், இங்கு "மூலபருடையார்' என்ற அந்தணர் சபை இயங்கிற்று என்பதும், கோயிலுக்குத் தானமாக நிலங்களும், பொருட்களும், நந்தா விளக்கும் வழங்கப்பட்டது என்பதும், இவ்வூர் நிலங்களுக்கு நீர் பாய்வதற்காகத் 'தேவேந்திர வல்லபப் பேரேரி', 'நின்ற நாராயணப் பேரேரி' என்று இரு பெருங்குளங்கள் இருந்ததையும் அறிய முடிகின்றது. இங்குக் காணப்படும் விமானம் தனித்துவமான வடிவத்தைக் கொண்டுள்ளது.
தகவல்
முனைவர் கந்தசாமி
குறிப்புகள்
விருதுநகர் மாவட்ட வரலாறு; விருதுநகர் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 2, "வரலாற்று நோக்கில் விருதுநகர் மாவட்டம்" பக்கம் -96.
செல்லும் வழி
சிவகாசியில் இருந்து விருதுநகர் செல்லும் வழியில் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருத்தங்கல் மற்றும் சிவகாசி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
திருத்தங்கல் ரயில் நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
திருத்தங்கல் மற்றும் சிவகாசி
மீடியா கோப்புகள் இல்லை
No media Files