Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

குறள்மணீசுவரர் கோயில்

Kuralmaneeswarar Temple

கோயிலின் வேறு பெயர்

மீனாட்சி சொக்கநாதர் / சுந்தரேசுவரர்


பிற தெய்வத்தின் பெயர்கள்

துர்க்கை அம்மன், இலிங்க புராணத் தேவர், அருந்தவஞ்செய்த நாச்சியார் அம்மன்


மூலவர் பெயர்

மீனாட்சி - சொக்கநாதர்


ஊர்

சொக்கலிங்கபுரம்

மாவட்டம்

விருதுநகர்

காலம்/ ஆட்சியர்
பாண்டியர், ஜடாவர்மன் குலசேகரன் (பொது ஆண்டு 1190 - 1218)
கல்வெட்டு / செப்பேடு
மீனாட்சி சொக்கநாதர் கோயிலின் அர்த்த மண்டபத்தின் அடித்தளம்; வடக்கு, மேற்கு, மற்றும் தென் சுவர்களில் சுமார் 12 பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றுள் 9 கல்வெட்டுகள் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (பொது ஆண்டு 1216-1238) காலத்தைச் சேர்ந்தவை ஆகும். இதைத் தவிர முதலாம் சடையன் குலசேகரன் மற்றும் எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகரன் ஆகிய மன்னர்களின் ஆட்சியின் போது வெட்டப்பட்ட கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. கல்வெட்டுகளில், இக்கோயில் இறைவனின் பெயர் 'குறள்மாணி ஈஸ்வரமுடைய நாயனார்' என்றும், கோயில் அமைந்துள்ள இடம் 'செங்காட்டிருக்கை இடத்துவளி' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாம் சடையன் குலசேகரனின் 18ஆம் ஆட்சி ஆண்டு (பொது ஆண்டு 1207) கல்வெட்டு, நெசவுத் தொழிலாளி ஒருவர், அர்த்த மண்டபத்தில் திருவாயில் நிலைக்கால் அமைத்த செய்தியைத் தெரிவிக்கிறது. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் 3, 8, 10, 11, 15 மற்றும் 33ஆம் ஆட்சி ஆண்டு (பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டு) கல்வெட்டுகளில் அம்மன் சிற்பம், தேவகோட்டத்தில் துர்க்கை மற்றும் இலிங்கோத்பவர் சிற்பங்கள், திருஞானசம்பந்தர் திருமேனி ஆகியவை அமைக்கப்பட்ட செய்திகளும்; நில விற்பனை, நந்தவனம் அமைப்பு மற்றும் இக்கோயிலுக்கு தேவதானமாக அளிக்கப்பட்ட நிலக்கொடை பற்றிய விவரங்களும்; இக்கோயிலில் மூன்று விளக்கு எரிக்க எண்ணெய் வழங்கப்பட்ட செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது. எம்மண்டலமுங் கொண்டருளிய குலசேகரதேவரின் 11ஆம் ஆட்சி ஆண்டு (பொது ஆண்டு 1279) கல்வெட்டில், பிள்ளையார் கோயிலுக்குக் நிலக்கொடை அளிக்கப்பட்ட செய்தி இடம் பெற்றுள்ளது. இக்கோயில் கல்வெட்டுகளின் மூலம், இக்காலக்கட்டத்தில் தென்னிலங்கை வளஞ்சியர் என்னும் வணிகக் குழுவினர் செயல்பட்டுவந்ததையும், விக்கிரம பாண்டியன் பெருந்தெரு என்ற பெயரில் வணிகச் சந்தை ஒன்று இங்கு இருந்துள்ளதையும் அறிந்துகொள்ள முடிகிறது.
சிற்பங்கள்
லிங்கோத்பவர் சிலை
தல வரலாறு / கதைகள்
தொடக்கக் காலத்தில் அருப்புக்கோட்டையான இவ்வூருக்குத் 'திருநல்லூர்' என்று பெயர் இருந்ததாகவும், வீரப்ப நாயக்கர் காலத்தில் (பொதுஆண்டு 1672 - 1692) இவ்வூரில் ஒரு கோட்டை கட்டப்பட்ட பின்னர் அருப்புக் கோட்டை எனப் பெயர் வந்தது எனவும் கூறுகின்றனர். கோட்டையில்; வீறுகொண்டு எழுந்து வரும் எதிரிகளின் தலைகளை அரிந்ததால் அருப்புக் கோட்டை என்று பெயர் ஏற்பட்டதாகவும் மக்கள் கூறுகின்றனர். நாயக்க மன்னனால் கட்டப்பட்ட கோட்டை இன்றும் இடிந்த நிலையில் இங்குக் காணப்படுகின்றது.
கோயில் அமைப்பு
விமானம், கருவறை, முக மண்டபம் ஆகிய அமைப்புகள் உள்ளன. அம்மன் சந்நிதியும் உள்ளது.
சுருக்கம்
இந்தக் கோயில் இப்போது 'மீனாட்சி சொக்கநாதர் / சுந்தரேசுவரர்’ என்ற பெயரில் இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. ஆனால் கல்வெட்டுகளில் அருந்தவஞ் செய்த நாச்சியார்' மற்றும் 'குறள் மணி ஈசுவரம் உடையார்' என்று குறிப்பிட்டுள்ளது. இக்கோயிலில் பிற்காலப் பாண்டியர் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இங்குள்ள கல்வெட்டுகளில் பழைமையானது முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டாகும். எனவே இம்மன்னன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கருவறையின் வெளிப்பகுதியில் கோஷ்டத் தெய்வங்கள் காணப்படுகின்றன
கூடுதல் விவரங்கள்
இது ஜடாவர்மன் குலசேகரன் (1190 - 1218) காலத்திலேயே கட்டப்பட்ட கோயில் என்றாலும் இத்திருக்கோயிலில் பல இறையுருவங்களை அமைத்துக் கோயில் வழிபாட்டில் உயர்நிலைச் சிறப்பை ஏற்படுத்திய பெருமை மாறவர்மன் முதலாம் சுந்தர பாண்டியன் காலத்திற்கே உரியது. சுந்தரபாண்டியன் காலத்தில் இச்சிவாலயம் குறள் மணீசுவரமுடைய நாயனார் என்றழைக்கப்பட்டது. இங்குள்ள கல்வெட்டுகள் இவ்விறைவனுக்குப் பூந்தோட்டம் அமைப்பதற்காக நிலம் வழங்கிய செய்தி, “எனக்கு நல்ல பெருமாள் ” மற்றும் ”எனக்கு நல்ல நாயகி” என்ற பெயரில் தெய்வங்களின் உற்சவர் திருவுருவங்களைச் செய்து வழங்கிய செய்தி, குளம் ஓன்றை விற்ற செய்தி ஆகியனவும் தெரிய வருகின்றன.
தகவல்

முனைவர் கந்தசாமி

குறிப்புகள்
விருதுநகர் மாவட்ட வரலாறு. "வரலாற்று நோக்கில் விருதுநகர் மாவட்டம்" பக்கம் -18
செல்லும் வழி
அருப்புக்கோட்டை நகரிலிருந்து சொக்கலிங்கபுரம் செல்லும் வழியில் உள்ளது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அருப்புக்கோட்டை பேருந்து நிலையம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
விருதுநகர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
அருப்புக்கோட்டை

மீடியா கோப்புகள் இல்லை

No media Files