மணிகண்டேஸ்வரர் ஆலயம்
Manikandeswarar Temple
தலத்தின் சிறப்பு
இந்த ஆலயம் இசைக்கலைக்கு மிக முக்கியமான தலமாக இருந்துவருகிறது. இந்தக் கோயிலில் மணி சப்தத்தைக் கேட்டபிறகு குருவிடம் இசையைக் கற்க ஆரம்பித்தால், தூய்மையான இசை ஞானத்தைப் பெறலாம் என்பது இவ்வூர் மக்களின் நம்பிக்கை. பல ஆண்டுகளுக்கு முன், இந்தத் தலத்தில் மிகபிரமாண்டமாக வீணை இசைப்போட்டிகள் நடைபெற்றதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இசைக்கலைஞர்கள், தங்களின் அரங்கேற்றம் மற்றும் கச்சேரிகளுக்கு முன்பாக மணிகண்டேஸ்வரரை தரிசித்து வேண்டிக்கொண்டால், அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் வெற்றி கிடைக்கும் என்று பக்தர்கள் கருதுகின்றனர்.
மூலவர் பெயர்
மணிகண்டேஸ்வரர்,
தல மரம்
வில்வம்
கோயில் குளம்/ஆறு
வைகை ஆறு
ஆகமம்
சிவாகாமம்
திருவிழாக்கள் விவரங்கள்
சித்திரை மாதம் மீனாட்சி திருக்கல்யாணம் விழா, பிரதோஷ பூசை, மார்கழி பூசை, சிவராத்திரி பூசை, நவராத்திரி பூசை, கார்த்திகை பூசை உள்ளிட்ட பூசைகள் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
பால் அபிஷேகம்.
சிற்பங்கள்
சிவன், உமா மகேஸ்வரி, ஸ்ரீ தேவி பூதேவி சமேத சுந்தரமாணிக்கபெருமாள், நவகிரகம், பைரவர், கருடர், ஆஞ்சநேயர், பிரம்மா, விஷ்ணு, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி போன்ற சிற்பங்கள் உள்ளன.
கோயில் அமைப்பு
சிறிய விமானம் மற்றும் சிறு சன்னதிகள் உள்ளன. இங்கு, ஸ்ரீ தேவி பூதேவி சமேத சுந்தரமாணிக்கபெருமாள், நவகிரகம், பைரவர், கருடர், ஆஞ்சநேயர், பிரம்மா விஷ்ணு லிங்கோத்பவர், தட்சிணா மூர்த்தி, காசி விசாலாட்சி உள்ளிட்ட பல்வேறு சந்நிதிகள் அமைந்துள்ளன.
சுருக்கம்
இங்குள்ள ஈசனின் திருநாமம் மணிகண்டேஸ்வரர் என்பதாகும். இங்கு உமா மகேஸ்வரி வடிவில் தேவி அருள்பாலிக்கிறார்.
கூடுதல் விவரங்கள்
சிவபெருமான் ‘மணிகண்டேஸ்வரர்’ என்ற பெயரில் சுயம்பு லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். இங்கு உள்ள தட்சிணாமூர்த்தி யோகவடிவில் அமர்ந்திருக்கிறார். இக்கோயிலில் காணப்படும் லிங்கோத்பவரின் அமைப்பு, மிகவும் மாறுபட்ட வகையில் அமைந்துள்ளது. லிங்கோத்பவர் சிலையின் மேல் பகுதியில் பிரம்மா அன்ன வாகனத்தில் காணப்படுகிறார். சிலையின் கீழ் பகுதியில் விஷ்ணு பன்றி உருவத்தில் காணப்படுகிறார். இதைத் தவிர, இச்சிலையின் இருபுறமும் விஷ்ணு மற்றும் பிரம்மா நின்றகோலத்தில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளனர். இக்கோயிலில் சிவபுராணக் காட்சிகளும் காணப்படுகின்றன.
தல வரலாறு / கதைகள்
சமணர்களுக்கும் திருஞானசம்பந்தருக்கும் அனல்வாதம் புனல்வாதம் நடைபெற்றது. அப்போது வைகை ஆற்றில் ஞானசம்பந்தரின் ஏடு விடப்பட்டது. அந்த ஏடு ஆற்றின் எதிர்த்திசையில் மிதந்து, கீழமாத்தூர் கிராமத்தின் அருகே சென்றபோது, பலத்த ஓசையுடன் பல்லாயிரக்கணக்கான மணிகள் ஒலிக்கும் சத்தம் கேட்டது. இதைக் கேட்டு வியந்துபோன அப்பகுதியை ஆண்ட மன்னனும் திருஞானசம்பந்தரும் அந்தத் இடத்திற்குச் சென்றனர். அப்போது குடில் அமைக்க வேலை ஆட்கள் மண்ணைத் தோண்டிக் கொண்டிருந்தனர். முதல்முறை தோண்டிய போது, மணல் பூமியிலிருந்து ஆகாயத்திற்கு பறந்தது. இரண்டாம் முறை தோண்டிய போது, தண்ணீர் வெள்ளமாக ஊற்றெடுத்துள்ளது. மூன்றாம் முறை தோண்டும்போது, சுயம்புவாக மண்ணுக்குள் இருந்த லிங்கத்தின் மீது அடி பட்டது. உடனே லிங்கத்திலிருந்து ரத்தம் பெருகியது. இந்த அதிசயத்தைக் கண்டு மண்ணைக் கவனமாய் தோண்டியபோது இறைவன் லிங்கவடிவில் வெளிப்பட்டார். மண்ணில் இருந்து மணியோசையோடு வெளிப்பட்ட சிவலிங்கத்தை வெளியே எடுக்க முயன்றபோது, அது முடியாமல் போனது. எனவே திருஞானசம்பந்தர், ஈசன் இங்கேயே அருள்புரிய விரும்புவதை புரிந்துகொண்டு, மன்னனின் மூலமாக அங்கேயே ஆலயம் எழுப்பியுள்ளார். இந்நிகழ்வின் அடிப்படையில் இக்கோயில் சிவனுக்கு ’மணிகண்டேஸ்வரர்' என்ற பெயர் வழங்கப்பட்டதாக தலவரலாறு உள்ளது.
தகவல்
முனைவர் ஆத்மநாதன்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
திருவேடகம் கோயில்
செல்லும் வழி
மதுரையில் இருந்து 12 கி.மீ தூரத்தில் மேலக்கால் சாலையில் செல்லலாம் . மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீழமாத்தூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
மதுரை நகரில் தங்கும் வசதி உள்ளது
மீடியா கோப்புகள் இல்லை
No media Files