சமணர்மலை கருப்பண்ணசாமி மற்றும் ஐயனார் கோயில்
Samanarmalai Karuppannasamy and Ayyanar Temple
மூலவர் பெயர்
மலையடிக் கருப்பண்ணசாமி
திருவிழாக்கள் விவரங்கள்
இந்தக் கோயிலில் நடக்கும் வைபவங்களில் இரண்டு மிகவும் முக்கியமானவை. ஒன்று ஐயனாருக்கு நடைபெறும் பாவாடைப் பூசை. மற்றொன்று புரட்டாசிப் பொங்கல் திருவிழா.
மார்கழி மாதம் ஐயனாருக்குப் ‘பாவாடைப் பூசை’ நடைபெறும். கீழக்குயில்குடிக்காரர்கள் இந்தப் பூசைக்காக, ஊருக்குள் வரி பிரித்துப் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். நூற்றைம்பது படி அரிசியில் சர்க்கரைப் பொங்கல் செய்து அதை ஐயனார் சந்நிதிக்கு எதிரே உள்ள நான்கு கால் மண்டபத்தில் கோபுரம் போல் குவித்து வைப்பர். பின்பு அதற்கு அலங்காரம் செய்து பூசைகள் நடைபெறும். அதிகாலை நான்கு மணிக்கு ஊர்மக்களை எழுப்பிக் கோயில் வாசலில் அமரவைப்பர். அப்போது ஐயனார் பூசாரி மீது இறங்கி அருள்வாக்குச் சொல்வார். பொழுது விடிந்ததும் அந்தப் பொங்கலை அனைத்து வீடுகளுக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுத்துப் பூசையை நிறைவு செய்வர்.
‘புரட்டாசிப் பொங்கல் திருவிழா’ களைகட்டும். புரட்டாசி மாதத்தின் முதல் 15 நாட்களுக்குள் வடிவேல்கரை கிராமமும், அடுத்த 15 நாட்களுக்குள் கீழக்குயில்குடி கிராமமும் இந்தத் திருவிழாவைக் கொண்டாடுகின்றன. இங்கு இரண்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவில், முதல் நாள் அம்மன் எடுப்பு நடைபெறும். கிராமத்து மந்தையில் மண்ணால் ஒரு முத்தாலம்மன் சிலை செய்து, அலங்கரித்து வழிபடுவார்கள். கிராமத்துப் பெண்கள், அம்மனுக்கு மாவிளக்குப் போடுவர். பிறகு ஊர்வலமாக முத்தாலம்மனை எடுத்துச் சென்று அருகேயுள்ள கண்மாயில் கரைக்கும் வழக்கம் இங்கு உள்ளது. மறுநாள் புரவி எடுப்பு நடைபெறும். இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பாகவே விளாச்சேரியில் இருக்கும் மக்களிடம், ஊர் சார்பில் மூன்று குதிரைகள் செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள். இரண்டாம் திருவிழாவின்போது பிற்பகல் 3 மணியளவில், மேளதாளத்துடன் வந்து, குதிரைகளைத் தூக்கிச் செல்கிறார்கள். அன்றிரவு கிராமப் பொது மந்தையில் குதிரைகளை இறக்கி வைக்கிறார்கள். அங்கே ஐயனாருக்கு நெல் உள்ளிட்ட தானியங்களைக் காணிக்கையாகத் தருகிறார்கள். பிறகு, அங்கிருந்து கிளம்பும் குதிரைகள், கோயில் வாசலை அடைகின்றன. அப்போது பானைகள் மற்றும் கிடாய்களுடன் வந்து கருப்பசாமிக்கு பொங்கல் வைத்துக் கிடாய் வெட்டுகின்றனர்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
பக்தர்கள் தங்களது குடும்பத்தில் நடக்க இருக்கும் முக்கியக் காரியங்களில் முடிவெடுக்கும் போது, இங்கு வந்து பூக்கட்டிப்போட்டு உத்தரவு கேட்டே அனைத்தையும் செய்கிறார்கள். சிவப்பு நிறப்பூ வந்தால் காரியத்தைக் கைவிடுகிறார்கள். வெள்ளைநிறப்பூ கிடைத்தால் உடனடியாகக் காரியத்தில் இறங்கலாம் என்பது இவர்களின் நம்பிக்கை.
காலம்/ ஆட்சியர்
சுமார் 200 ஆண்டுகள் பழைமையானக் கோயிலாகக் கருதப்படுகிறது.
சிற்பங்கள்
மலையடிக் கருப்பண்ணசாமி, கழுவநாதன், ஐயனார்
தல வரலாறு / கதைகள்
ஒருநாள் ஆங்கிலேய அதிகாரி தன் சிப்பாயுடன் மீனாட்சி அம்மன் கோயில் கோபுரத்தின் அருகில் வந்து அவமதிக்கும் வகையில் சிரித்தார். அதைக் கண்டு கோபமுற்ற கருப்பசாமி அவருக்குப் படிப்பினை புகட்ட அவரது குதிரையின் காலை வாரிவிட்டார். அது தெய்வத்தின் செயல் என்று அவர் உணரவில்லை. மறுநாளும் அதே இடத்துக்கு வந்தபோது குதிரை கால் இடறிக் கீழே விழுந்தது. இப்போது கலவரமான அதிகாரி, ஊரில் குறிசொல்லும் ஆட்களை அழைத்து வினவுகையில், இந்தச் சம்பவத்தின் பின்னிருப்பது அந்த மலைக்கருப்பன்தான் என்பதைக் கண்டுகொண்டார்கள் பூசாரிகள்.
கோபம் கொண்ட ஆங்கிலேய அதிகாரி மலை உச்சிக்குச் சென்று அங்கிருந்த கருப்பசாமி சிலையை இடித்துத் தள்ளச் சொல்லி ஆணையிட்டார். ஊர் மக்கள் கூடித் தடுத்தனர். ”இவர் எங்கள் ஊரைக்காக்கும் தெய்வம். அதை மலை உச்சியிலிருந்து கீழே கொண்டு வைத்து ஆராதனை செய்துவந்தால் அதன் உக்கிரம் தணியும். நாங்களும் நலமுடன் வாழ்வோம்” என்றனர் ஊர்மக்கள். அதிகாரிகளும் அவர்களின் கோரிக்கைக்குச் சம்மதித்தனர். மக்கள் கருப்பசாமியை மலை அடிவாரத்தில் இருந்த ஐயனார் கோயிலில் வடக்கு நோக்கிப் பிரதிஷ்டை செய்தனர். அன்று முதல் கருப்பசாமி அங்குக் குடியிருந்து அருள்பாலித்து வருகிறார்.
இங்கு ஐயனார், கருப்பண்ணசாமி, விருமன், காசிமாயன், கழுவநாதன் மற்றும் பல தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர். இவர்கள் இந்த ஆலயத்தில் எழுந்தருளிய நிகழ்வு இவ்வாறாக நடைபெற்றது:
கீழக்குயில்குடி, வடிவேல்கரை ஆகிய ஊர்களில் ஒரு காலத்தில் பஞ்சம் ஏற்பட்டது. பிழைக்க வழியறியாத மக்கள் அங்கிருந்து கொஞ்சம் நகர்ந்து நாலா திசையிலும் குடிபுகுந்தனர். அவர்களில் ஒரு சமூகத்தினர் கருமாத்தூரில் குடியேறினர். அங்கிருந்த விருமன் மற்றும் காசிமாயனை வழிபடத் தொடங்கினர். பின்னர் அவர்களே அங்குப் பூசாரிகளாகவும் மாறினர். காலநிலை மாறியது. மக்கள் சொந்த ஊருக்குத் திரும்ப விரும்பினர். மக்கள் அங்கிருந்து பிடிமண் எடுத்துக்கொண்டு தங்கள் ஊர் வந்து சேர்ந்தனர். அப்படி வந்த விருமனையும் காசிமாயனையும், ஐயனார் கோவிலிலேயே வைத்து வழிபட்டனர், கூடவே பிற தெய்வங்களுக்கும் சிலை வைத்து வணங்கத் தொடங்கினர்.
கோயில் அமைப்பு
நாகமலையின் அடிவாரத்தில் தாமரைக்குளத்தருகே அமைந்துள்ள இக்கோயிலில் கிராமக் காவல் தெய்வங்கள் பல அமைந்துள்ளன.
சுருக்கம்
இங்கு ஐயனார் தம் துணைவியர் இருவரும் அருகிருக்க அருள்பாலிக்கிறார். மேலும் இந்த ஆலயத்தில் கருப்பண்ணசாமிக்குப் பக்கத்தில் விருமனும், காசிமாயனும், கழுவநாதன் - கருப்பாயி அம்மாளும், இருளப்பனும், சங்கிலிக் கருப்பண்ணசாமியும், சோணைச்சாமியும், வீரபத்திரசாமியும் அருள்பாலிக்கின்றனர்.
தகவல்
முனைவர் ஆத்மநாதன்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
சமணர் மலை
செல்லும் வழி
மதுரை - தேனி சாலையில் 10 கி.மீ. பயணித்துத் தெற்காக வரும் சாலையில் திரும்பி 2 கி.மீ. பயணித்தால் திருக்கோவிலை அடையலாம்.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வெள்ளைச்சாமி நாடார் கல்லூரிப் பேருந்து நிறுத்தம், கீழக்குயில்குடி பேருந்து நிறுத்தம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை விமான நிலையம்
தங்கும் வசதி
பல்கலைக்கழகம் அருகிலும் இராஜம்பாடி அருகிலும் தங்கும் வசதி உள்ளது.
மீடியா கோப்புகள் இல்லை
No media Files