அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்
Subramaniya Swamy Temple
பிற தெய்வத்தின் பெயர்கள்
தெய்வானை, துர்க்கை, பவளக்கனிவாய் பெருமாள், சிவபெருமான்
அமைவிடம்
திருப்பரங்குன்றம் மலையின் வடக்குப் புறத்தில் அடிவாரத்தில் உள்ளது.
தலத்தின் சிறப்பு
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடாகத் திகழ்கின்றது. இங்குச் சூரசம்காரம் நிகழ்ச்சியின் போது முருகப்பெருமான் ஆவுடைநாயகி அம்பாளிடம் திருக்கை வேல் வாங்கும் நிகழ்ச்சி சிறப்பான ஒன்றாகும். கோயிலில் வெண்ணெய் சிறு உருண்டைகளாகத் திரட்டி விற்கப்படும். அவ்வெண்ணெய் உருண்டைகளை வாங்கிக் கோயிலிலுள்ள மிகப் பெரிய நந்தி சிலை மீது மனத்தில் வேண்டுதல்களோடு பக்தர்கள் எறிவார்கள். வெண்ணெய் உருண்டை நந்தியின் மேல் ஒட்டிக் கொண்டால், நினைத்தது நடக்கும் என்று வழிவழியாய் நம்பப்பட்டு வருகிறது.கோயில் பகுதியில் பசுமடமும் வேதபாடசாலையும் மயில்களின் காப்பகமும். செயல்படுகின்றன.
ஊர்
திருப்பரங்குன்றம்
மாவட்டம்
மதுரை
மூலவர் பெயர்
முருகன்
தல மரம்
கல்லத்தி மரம்
கோயில் குளம்/ஆறு
காசித்தீர்த்தம் / இலட்சுமி தீர்த்தம்
ஆகமம்
காரணம் / காமிகம்
பூசைக்காலம்
1. திருவனந்தல் பூசை அதிகாலை 5:30 மணி முதல் 6 மணி வரை.
2. விளா பூசை காலை 7 மணி முதல் 7:30 மணி வரை.
3. காலசந்தி பூசை காலை 8 மணி முதல் 8:30 மணி வரை.
4. திருக்காலச் சந்திப் பூசை முற்பகல் 10:30 மணி முதல் 11 மணி வரை.
5. உச்சிக்காலப் பூசை 12:30 மணி முதல் 1 மணி வரை.
6. சாயரட்சை பூசை மாலை 5:30 மணி முதல் 6 மணி வரை.
7. அர்த்தசாம பூசை இரவு 8:30 மணி முதல் 9 மணி வரை.
8. பள்ளியறை பூசை இரவு 9 மணி முதல் 9:15 மணி வரை.
திருவிழாக்கள் விவரங்கள்
சித்திரை மாதம்: முருகப்பெருமானுக்குத் தங்கக் கவசம் சாற்றுதல் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருக்கல்யாண விழாவுக்குப் புறப்படுதல் நடைபெறும்.
வைகாசி மாதம்: வசந்தவிழா (விசாகம்),
பிற விழாக்கள்:
பாலாபிஷேகம், கந்தசஷ்டி மற்றும் ஆடிப்பூரம், ஆடிக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, ஆவணி மூலத் திருவிழா, நவராத்திரி, சரஸ்வதி பூசை, விஜயதசமி, ஐப்பசி பூரம், கந்தசஷ்டி, கார்த்திகை சோமவரங்கள், திருக்கார்த்திகை, திருப்பள்ளி எழுச்சி (மார்கழி), ஆருத்திரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி, தெப்பத் திருவிழா, தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனிப் பெருவிழா, ஆனி ஊஞ்சல், மொட்டையரசுத் திருவிழா, ஆனி முப்பழத் திருவிழா ஆகியவை நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
திருப்பரங்குன்றம் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையிலுள்ள தங்க வேலுக்கு மட்டுமே பாலாபிஷேகம் செய்யப்படுகிறது.
காலம்/ ஆட்சியர்
பாண்டியர், விஜயநகர நாயக்கர் காலம்
கல்வெட்டு / செப்பேடு
பாண்டியர் மற்றும் விஜயநகர நாயக்கர் காலக் கல்வெட்டுகள் இக்கோயிலின் அர்த்தமண்டபத்தில் காணப்படுகின்றன. இக்கோயிலில் அருள்மிகு விஷ்ணு துர்க்கைக் கருவறையின் மேல் நிலையில் உள்ள கல்வெட்டில் கலி ஆண்டு 3874 (பொது ஆண்டு 773) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வட்டெழுத்துக் கல்வெட்டில் சாத்தன் கணபதி திருத்துவித்த திருக்கோவிலும், ஸ்ரீ தடாகமும் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் 41 கல்வெட்டுக்கள் உள்ளன. குடைவரைக் கோயில் தூணில் உள்ள கல்வெட்டு:
1. ஸ்ரீ கொமாறஞ் சடையற்கு
2, ராஜ்ய வர்ஷம் ஆறாவது செல்லா
3. நிற்ப மற்றவற்கு மஹா
4. சாமந்தானகிய கரவந்த புராதி
5. வாசீ வைத்யன் பாண்டி அமி
6 ர்தமங்கல வரையனா இ
7. ன சாத்தங் கணபதி தி
8. ருத்துவித்தது திருக்கொ
9. லும் ஸ்ரீ தடாகமும் இதனுள
10. றமுள்ளதும் மற்றவ
11. ற்கு தர்மபத்னி ஆகிய ந
12. க்கங் கொற்றியாற் செய
13. ப்பட்டது துர்க்கா தெவி கொ
14.இலுஞ் ஜெஷ்டை கொஇலும்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கோபுரத்தின் வலப்பக்கமுள்ள கல்வெட்டு:
1. ஸகாப்தம் 1505ன் மெல்
2. செல்லா நின்ற சுபானு
3. ௵கார்த்திகைய் 12 உ விசு
4. வநாதநாயக்கர் கிஷ்ணப்ப
5. நாயக்கரய்யன் குமாரர்
6. வீரப்ப னாயக்கரய்யன்
7. கட்டிவித்த கொபுரமும் திரு
8. மதிளும் உ
சிற்பங்கள்
1. வல்லப கணபதி
2. தட்சிணாமூர்த்தி - பிரம்மனின் குமாரர்களுக்கு உபதேசம் செய்த கோலம்
3. கோவர்த்தனாம்பிகை இங்குத் தனிச் சந்நிதியில் உள்ளார்
4. சனிபகவானுக்குத் தனிச் சந்நிதி உள்ளது.
தல வரலாறு / கதைகள்
கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு ’ஓம்’ எனும் பிரணவ (பரம்பொருளே எனும் பொருளுடைய) மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, பார்வதியின் மடிமீது அமர்ந்திருந்த முருகப் பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்டார். புனிதமான மந்திரப் பொருளைக் குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. இது பாவம் என்பதால் இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார். இந்நிலையில், அவர் தவத்தை மெச்சி சிவபெருமானும் பார்வதி தேவியாரும் முருகப் பெருமானுக்கு அங்குக் காட்சி தந்தனர். சிவனும் பார்வதியும் இங்குப் பரங்கிநாதர் மற்றும் ஆவுடை நாயகி என்னும் பெயர் பெற்றார்கள்.
முருகப்பெருமானுக்குச் சிவன் தை மாதத்தில், பூச நட்சத்திரத்தன்று காட்சி தந்தார். எனவே திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா, பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே, சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்துத் தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே அவர் சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார். இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்களின் தலைவனான இந்திரன், முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில், தன் மகளாகிய தெய்வயானையைத் திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் மற்றும் தெய்வயானை திருமணம் இந்தத் திருப்பரங்குன்றத்தில் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. தொன்றுதொட்டு இக்கோயிலில் சூரசம்காரத்தில் ஈடுபட்ட வீரவாகு தெய்வத்தின் வழித்தோன்றல்கள் என்று அறியப்படும் செங்குந்த முதலியார் மரபைச் சேர்ந்தவர்கள் இங்கு சுவாமியைச் சுமந்து செல்லும் சீர்பாத சேவையைச் செய்து வருகின்றனர்.
கோயில் அமைப்பு
வீரப்ப நாயக்கரால் சக ஆண்டு 1505 இல் (பொது ஆண்டு 1583 ) இராஜ கோபுரம், திருமதில் சுவர் கட்டி முடிக்கப்பட்டது. உயரம் 46 மீட்டராக இருக்கும் இந்த ராஜகோபுரத்தின் அடிப்பகுதி நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் உச்சிப் பகுதியில் காணப்படும் சுதைச் சிற்பங்களும் அழகாக உள்ளன.
சுருக்கம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடாகத் திகழ்கின்றது. இந்தக் கோயில், மதுரைக்குத் தென்மேற்கில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பரங்குன்றம் என்னும் ஊரில் உள்ளது. இங்குத்தான் முருகன், தெய்வானையைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றனர். சுப்பிரமணிய சுவாமிகள் அமர்ந்த நிலையில் திருக்கல்யாணக் கோலத்தில் காட்சி தருகிறார். ஏனெனில் இது முருகனின் திருமணத்தலம் ஆகும்.
இத்திருத்தலத்தின் கருவறையில் சத்தியகிரீஸ்வரர், விநாயகர், துர்க்கை, சுப்பிரமணியர், கணபதி, பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆகிய ஐந்து தெய்வங்களும் சுப்பிரமணியருக்கு அருகே அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். கருவறையில் நக்கீரர், சூரியன், சந்திரன், காயத்திரி, சாவித்திரி, சித்தவித்யாதரர், கலைமகள், நான்முகன், இந்திரன் ஆகிய அனைத்துத் தெய்வங்களும் இங்கு காட்சியளிக்கின்றனர்.
கூடுதல் விவரங்கள்
இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை எனப் பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.
தகவல்
முனைவர் ஆத்மநாதன்
குறிப்புகள்
இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை : 1890ஆம் ஆண்டு - 49, 1908ஆம் ஆண்டு - 37, 1917 ஆம் ஆண்டு - 860 , 861, 1918ஆம் ஆண்டு - 336, 339.தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி(S.I.I.) Vol.XIV No.3
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
தென்பரங்குன்றம்
செல்லும் வழி
வான்வழி: மதுரை விமான நிலையம் நகரிலிருந்து 12 கி.மீ. (7.5மைல்கள்) தொலைவில் அவனியாபுரத்தில் உள்ளது.
தொடர்வண்டி வழி: மதுரை இரயில்வே சந்திப்பு, மாவட்டத்தின் முக்கிய இரயில் நிலையமாக விளங்குகிறது.
சாலை வழி: மதுரை நகரத்திலிருந்து மாநிலப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயங்குகின்றன.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருப்பரங்குன்றம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
திருப்பரங்குன்றம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை பன்னாட்டு விமான நிலையம்
தங்கும் வசதி
கோயிலுக்கு அருகில் தங்கும் விடுதிகள் நிறைய உள்ளன.
மீடியா கோப்புகள் இல்லை
No media Files