யோகநரசிங்கப் பெருமாள் கோயில்
Yoganarasimha Perumal Temple
கோயில் குளம்/ஆறு
சக்கரத் தீர்த்தம்
பூசைக்காலம்
காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை வழிபாடு நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
தேய்பிறை பிரதோஷக் காலத்தில் மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்ததால் இக்கோயிலில் தேய்பிறை பிரதோஷத்தில் மிகச் சிறப்பான பூசைகள் செய்யப்படுகின்றன. இச்சமயத்தில் நரசிம்ம மூர்த்தியை வழிபட்டால் மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள் என்றும், தொழில், வணிகங்கள் நன்கு வளர்ச்சியடையும் என்றும், தீய சக்திகளின் தாக்கமும் மரணப் பயமும் நீங்கும் என நம்பிக்கை உண்டு. இச்சமயத்தில் நரசிம்மரோடு நரசிங்கவல்லித் தாயாரையும் வணங்கத் திருமணத் தடை, தாமதம் போன்றவை நீங்கும் என நம்பப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
கோயிலின் அர்த்த மண்டபத்தின் இருபுறமும் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. ஒரு கல்வெட்டில்
“கோமாறஞ் சடையற்கு உத்தரமந்திரி களக்குடி வைத்தியன் மூவேந்த மங்கலப் பேரரையன் ஆகிய மாறங்காரி இக்கற்றளி செய்து நீர் தெளியாதேய் சுவர்க்க ஆரோணேஞ் செய்த பின்னை அவனுக்கு அநுஜன் உத்திர மந்திரி பதமெய்தின பாண்டியமங்கல விசைய அரையன்ஆகிய மாறன் எயினன் முகமண்டபஞ்செய்து நீர் தெளித்தான்”
என்ற வாக்கியம் உள்ளது. இவை பொது ஆண்டு 770இல் பராந்தக நெடுஞ்சடையன் என்று அழைக்கப்பட்ட பாண்டிய மன்னன் மாறஞ்சடையனது காலத்தைச் சேர்ந்தவை. மாறஞ்சடையனின் அமைச்சராக இருந்த களக்குடியைச் சேர்ந்த, வைத்தியர் சமூகத்தைச் சேர்ந்த மூவேந்தமங்கல பேரராயன் என்ற மாறன் காரி என்பவரால் இந்தக் கோயிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டதாக இங்குள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அவரது திடீர் மரணம் காரணமாக, அமைச்சர் பதவி ஏற்ற மாறன் காரியின் சகோதரர் மாறன் எயினன் என்ற பாண்டிமங்கல விசயரையன் கோயிலின் கட்டுமானப் பணியைத் தொடர்ந்தார். கோயிலில் முக மண்டபம் சேர்த்துக் கும்பாபிஷேகம் நடத்தினார்.
கிரந்த எழுத்துக்கள் மற்றும் சமஸ்கிருத மொழியில் உள்ள இரண்டாவது கல்வெட்டு, கலி ஆண்டு 3871ஐக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டிலிருந்து பாண்டியப் பேரரசின் ஆட்சியாளர்களின் காலவரிசைத் தரவுகள் கிடைக்கின்றன. ’மதுரகவி’ என்றழைக்கப்படும் மாறன் காரி, (மாறஞ்சடையனின் மந்திரி) விஷ்ணுவுக்குக் கோயில் எழுப்பியதாகவும், பிராமணர்களுக்காக அக்கிரகாரத்தை உருவாக்கியதாகவும் இக்கல்வெட்டு கூறுகிறது. மேலும் கோயில் கட்டி முடிக்க மாறன் எயினனின் பங்களிப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிற்பங்கள்
கருவறையிலுள்ள நரசிங்கப் பெருமாளின் பெரிய திருவுருவம் ஆனைமலையின் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டதாகும். இவர் கோபமான உருவத்துடன் வெப்பத்தை வெளிப்படுத்தும் விதமாகவுள்ளார். அவரது மார்பில் மகாலட்சுமியுடன் காட்சியளிக்கிறார்.
கோயில் அமைப்பு
யானைமலைக் குடைவரைக் கோயிலில் மூலவர் யோக நரசிம்மர் மேற்குப் பார்த்தபடியும், தனிச் சந்நிதியில் நரசிங்கவல்லித் தாயார் தெற்குப் பார்த்தபடியும் அருள்பாலிக்கிறார்கள். இந்தக் கோயிலில் கொடி மரம் கிடையாது. கருவறையின் முன்னே அர்த்த மண்டபம் அமைந்துள்ளது.
சுருக்கம்
இக்கோயில் யானைமலையைக் குடைந்து செய்விக்கப்பட்ட ஒரு குடைவரைக் கோவிலாகும். இக்கோயில் முற்காலப் பாண்டிய மன்னன் மாறஞ்சடையன் என்கிற பராந்தக நெடுஞ்சடையன் ஆட்சிக்காலமான பொது ஆண்டு 770ஆம் ஆண்டில், தன் மந்திரியான மாறன்காரியாலும், பின் அவன் சகோதரனான மாறன் எயினனாலும் கட்டப்பட்டது. இக்கோயிலில் உள்ள இரு கல்வெட்டுகள் இத்தகவலைக் கூறுகின்றன.
கூடுதல் விவரங்கள்
இக்கோயிலிலுள்ள யோகநரசிம்மர் கோபமான உருவத்துடன் வெப்பத்தை வெளிப்படுத்துகிறார் என்றும் கூறப்படுகிறது.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 8ஆம் நூற்றாண்டு, பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன் கட்டிய கோயில்.
தல வரலாறு / கதைகள்
உரோமச முனிவர் தனக்குப் புத்திரப் பாக்கியம் வேண்டி இங்கு வந்து சக்கரத் தீர்த்தத்தில் நீராடி யாகத்தைத் தொடங்கினார். அப்போது நரசிம்ம மூர்த்தியை அவரது அவதாரக் காலத்தில் எப்படி இருந்தாரோ அதேபோல் தரிசிக்க ஆசைப்பட்டார். இவரது ஆசையை நிறைவேற்றப் பெருமாள் உக்கிர நரசிம்மராகக் காட்சி தந்தார். உக்கிரக் கோல வெப்பத்தால் உலகே தத்தளித்தது. தேவர்களும், முனிவர்களும் பயந்து நரசிம்மரின் உக்கிரத்தைத் தணிக்க வர வேண்டுமெனப் பிரகலாதனிடம் கேட்டுக் கொண்டனர். பிரகலாதனும் இத்தலத்துக்கு வந்தான். அப்போது நரசிம்மரின் உக்கிரம் குறைந்ததே தவிர முற்றிலுமாக நீங்கவில்லை. எனவே மகாலட்சுமியிடம் தேவர்கள் விஷயத்தைக் கூறினர். உலகைக் காக்கும் அந்தத் தாயார் வந்ததுமே, உக்கிர நரசிம்மரின் கோபம் தணிந்தது. இதுவே இத்தலத்தின் வரலாறாகக் கூறப்படுகிறது.
தகவல்
முனைவர் துர்கா தேவி
குறிப்புகள்
Madurai mavatta kalvettukal vol1 PAGE 254-256.
மீடியா கோப்புகள் இல்லை
No media Files