லாடன் கோயில் (முருகன் குடைவரைக் கோயில்)
Ladan Temple (Rock-cut Murugan Temple)
சுருக்கம்
யானை மலையின் வடக்குச் சரிவில் 'லாடன் கோயில்' என்றழைக்கப்படும் இக்கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள முனிவர் சிற்பம் 'லாட முனிவர்' என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டு வந்ததால் பின்னர், இக்கோயில் 'லாடன் கோயில்' என்று அழைக்கப்பட்டு வருகிறது. பொது ஆண்டு 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இக்குடைவரைக் கோயில் முற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது. இது முருகப்பெருமானுக்காகக் குடைவிக்கப்பட்ட குடைவரைக் கோவிலாகும்.
இங்குச் சதுரமான சிறிய கருவறையும் நீள் சதுர முகமண்டபமும் காணப்படுகின்றன. முகமண்டபத்தை இரு தூண்கள் அலங்கரிக்கின்றன. கருவறையில், முருகன் தன் இடப்புறத்தில் தெய்வானையுடன் அமர்ந்த நிலையில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளார். கருவறையின் நுழைவாயிலின் இருபுறம் சேவலும் மயிலும் கொடிக்கம்பங்களின் மேல் செதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. கருவறை வாயிலின் வெளிச்சுவரின் இருபுறமும் இரு முனிவர்கள், கைகளில் மலர்க் கொத்துகளுடன் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டிருகின்றனர். முகமண்டபத்தின் ஒருபுறம் சிதைந்த ஒரு விலங்கின் உருவமும், மறுபுறம் மன்னனை ஒத்த உருவம் கையை உயர்த்தி மண்டியிட்டு வணங்கும் நிலையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. இவ்விடத்தில் கிழக்குச் சுவரில் பொது ஆண்டு எட்டாம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றும் வெட்டப்பட்டுள்ளது. அக்கல்வெட்டில் ’வட்டக்குறிச்சியைச் சேர்ந்த நம்பி பட்ட சோமாஜி பரிவிராஜகர் என்பவர் இக்கோவிலைப் புதுப்பித்தார்’ என்ற செய்தியைச் சொல்லும் வட்டெழுத்துக் குறிப்பு உள்ளது.
தகவல்
முனைவர் துர்கா தேவி
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
யோகநரசிங்கப் பெருமாள் கோயில்
செல்லும் வழி
யானை மலையின் வடக்குச் சரிவில் யோகநரசிங்கப் பெருமாள் கோவிலை அடுத்து லாடன் கோயில் அமைந்துள்ளது.
மீடியா கோப்புகள் இல்லை
No media Files