திருவாப்பனூர் கோயில்
Thiruvappanoor Temple
தல மரம்
வன்னி மரம்
பூசைக்காலம்
நாள்தோறும் ஐந்துக்காலப் பூசை. இரவு 8:30 மணி முதல் 9 மணி வரை பள்ளியறைப் பூசை நடைபெறுகின்றது.
திருவிழாக்கள் விவரங்கள்
தை மாதத்தில் வரும் அமாவாசை, மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மற்றும் பங்குனியில் வரும் உத்திரம் போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பிரதோஷ நாட்களில் சிறப்புப் பூசை நடைபெறுகின்றது.
கோயில் அமைப்பு
கோவிலைச் சுற்றி மதில்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேல் விமானமும் உள்ளது.
சுருக்கம்
திருவாப்பனூர் கோயில், சிவபெருமானுக்காக எடுக்கப்பட்ட கோவிலாகும். இக்கோயில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டுப் பின் நாயக்கர் காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை அதற்குப் பதிலாக ஒரு முகப்பு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த முகப்பு வாயிலில் சுதையால் செய்யப்பட்ட சிவனின் ரிஷபாரூடர் வடிவம், பார்வதி, தேவார நால்வர், முருகர் மற்றும் விநாயகர் ஆகியோர் உள்ளார்கள். உள்நுழைந்தவுடன் கொடிமரம் மற்றும் பலிபீடம் காணப்படுகிறது. கோயில் கருவறை அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய முன் மண்டபத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலை வலம் வந்தால் விநாயகர், காசி விஸ்வநாதர், பஞ்ச லிங்கம், சண்டிகேஸ்வரர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இக்கோயிலின் தலமரம் வன்னி மரம். வன்னி மரத்தின் அருகில் தாயார் சந்நிதி உள்ளது. தாயார் சந்நிதிக்கும் இறைவன் சந்நிதிக்கும் இடையில் முருகர் சந்நிதி உள்ளதால் இவ்வமைப்பை சோமஸ்கந்தர் அமைப்பு என்பர். இங்குத் தனி மண்டபத்தில் கல் சிற்பமாக நடராஜர் மற்றும் சிவகாமி, அருகில் மத்தளம் வாசிக்கும் நிலையில் நந்திதேவர் காட்சியளிக்கின்றனர். இதைத்தவிர நவக்கிரக சந்நிதி, கைலாசநாதர் மற்றும் பைரவர், பழனி முருகர் ஆகியோர் சிறிய சந்நிதிகளில் காட்சிதருகிறார்கள்.
தல வரலாறு / கதைகள்
ஒருமுறை மதுரையை ஆண்டு வந்த சோழாந்தகன் என்னும் பாண்டிய மன்னர் வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குச் சென்றார். அங்கே ஒரு மான் ஓடுவதைக் கண்ட மன்னர் அதை நீண்ட தொலைவுக்கு விரட்டிச் சென்று களைப்பின் மிகுதியில் ஒரு மரத்தடியில் படுத்துக் கண்ணயர்ந்தார். மன்னரைத் தேடிவந்த அமைச்சர் மற்றும் சேவகர்கள் மன்னரின் களைப்பைப் போக்க, அவருக்குப் பணிவிடைகள் செய்து உணவு உண்ணும்படி வேண்ட, மன்னர் "சுயம்பு லிங்க தரிசனமின்றி நான் அமுதுண்ண மாட்டேன்" என்று தெரிவித்தார்.
அமைச்சர்களும் மன்னரை உணவு உண்ணச் செய்வதற்காகச் சற்றுத் தொலைவில் கிடந்த ஓர் ஆப்பை எடுத்துத் தரையில் நட்டுவைத்து அதை லிங்கம் போல அலங்கரித்து மன்னரிடம் காட்டி “இது சுயம்புலிங்கம்" என்று கூறினர். மன்னரும் சுயம்பு லிங்கத்தைத் தரிசனம் செய்து உணவு உண்ணலானார். உணவு உண்டபின் லிங்கத்தை அருகே சென்று பார்த்தபோது, அது ஒரு ஆப்பில் செயற்கையாகச் செய்யப்பட்ட லிங்கம் என்று அறிந்தார். தனது சிவ விரதம் பாழ்பட்டதென வருந்தி உயிரைவிட முற்பட்டார். உடனே, "மன்னனே வருந்தாதே நானே ஆப்புவடிவில் எழுந்துள்ளேன், இங்கே ஒரு கோயில் நிறுவி சுகந்த குந்தலாம்பிகை அம்மன் சந்நிதியையும் நிறுவி எமைப் பூசிக்கவும்" என்று ஓர் அசரீரி கேட்டதும் மன்னர் மகிழ்ந்தார். பின் அவ்விடத்திலேயே ஆப்புடையீசனைத் தரிசித்து வணங்கினார்.
தகவல்
முனைவர் துர்கா தேவி
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெரியார் பேருந்து நிலையம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை ரயில் சந்திப்பு
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை விமான நிலையம்
மீடியா கோப்புகள் இல்லை
No media Files