தாழைக்கருப்புசாமி கோயில்
Thāzhaikaruppusāmi Temple
மூலவர் பெயர்
தாழைக்கருப்பு
திருவிழாக்கள் விவரங்கள்
ஆடி மாதம் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
அழகர் மலையில் தீர்த்தம் எடுத்து வருதல், 8 நாட்கள் கோடாங்கி அடித்தல், முள் போட்டு விரதம் விடுதல், மண் பானையில் சமைத்தல், ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் சட்டை மற்றும் செருப்பு அணியாமல் பொங்கல் வைத்து படையலிட்டு பின்னர் புது ஆடைகளை அணிவர்.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சுவரோவியம்
இங்கு மகாலட்சுமியை பூஜித்தபடி நிற்கும் யானைகள், அன்னப்பறவைகள் மற்றும் அலங்கார சுவரோவியங்கள் காணப்படுகின்றன.
சிற்பங்கள்
மூலவரான தாழைகருப்பு சிலை உள்ளது
கோயில் அமைப்பு
கருவறை மற்றும் எட்டு தூண்கள் கொண்ட முகமண்டப அமைப்பையுடைய அண்மைக்காலக் கோயில் கட்டிடம்
கூடுதல் விவரங்கள்
கருவறையில் பீடத்தின் மேல் நிற்கும் கருப்புசாமி, முறுக்கு மீசையுடன் வலது கையில் அரிவாள் மற்றும் இடது கையில் கதை பிடித்தபடி நின்றுள்ளார். இவர் கை, கால் மற்றும் கழுத்தில் அணிகலன்கள் அணிந்துள்ளார். தாழைக் கருப்புசாமி தலையில் அலங்கரிக்கப்பட்ட கொண்டையும், காலில் சிலம்பும் கைகளில் கை வளை மற்றும் தோள் வளையும், கழுத்தில் கண்டிகை, சரப்பள்ளி மற்றும் நீள் மாலையும் அணிந்துள்ளார்.
காலம்/ ஆட்சியர்
சுமார் 200 வருடம் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
தல வரலாறு / கதைகள்
இவ்வூரில் தாழைகருப்பு, பத்திரகாளி, பொன்னுமுனியன், பாப்பாகுண்டையன் போன்ற தெய்வங்கள் வணங்கப்படுகின்றன. மொத்தம் 61 சேனை மற்றும் 21 தெய்வங்களுக்கும் தலைமை தெய்வமாக இந்த தாழைகருப்பு சாமி இருப்பதாகவும், இவர் பலகாலங்களுக்கு முன் தன்னுடைய உறவினர்களுடன் தஞ்சை வளநாட்டிலிருந்து இங்கு வந்ததாகவும் இவ்வூர் மக்களால் கூறப்படுகிறது. தாழைகருப்புசாமி தன் குடும்பத்துடன் வெளி மாநிலத்தில் வசித்து வந்த போது தன் தங்கையை அம்மாநில மன்னர் விரும்பியதாகவும், தன் குல வழக்கத்திற்கு மாறாக உள்ளதால், அவ்வூரிலிருந்து தன் பரிவாரங்களுடன் படகிலேறி காவிரி ஆற்றின் வழியாக பயணித்துப் பெருவெள்ளத்தைக் கடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. படகு கவிழ்ந்து விழும் நிலையில் ஆகாச வீரன் என்ற தெய்வம் வன்னி மரத்தை சாய்த்து அவர்களை கரையேற்றியது. அவர்கள் வந்திறங்கிய ஊரில் அப்போது முளைப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர். அங்கு வயலில் வேலை செய்து கொண்டிருந்த காது கேளாதா பெரியவர் ஒருவரை தாழைகருப்பு அழைத்தார். தன்னை அழைக்கும் சத்தம் தன் காதுகளுக்குக் கேட்டதால் ஆச்சரியமுற்ற பெரியவடர் தாழைகருப்பின் அருகில் சென்றார். பெரியவரிடம் ’எனக்கு முளைப்பாரி பிடிக்காது. அவற்றை எடுத்துவிடும்படி கிராமத்தினரிடம் சொல்’ என்று கூறியுள்ளார். அதனை அலட்சியபடுத்திய பெரியவரிடம் ’உழுகின்ற இரட்டை மாடுகளில் ஒன்று கீழே விழுந்துவிடும்’ என்று தாழைகருப்பு கூறியுள்ளார். சிறிது நேரத்தில் அவ்வாறே மாடுகளில் ஒன்று கீழே விழுந்து விடுகிறது. அதிர்ச்சியுற்ற அப்பெரியவர், கிராமத்தினரிடம் முளைப்பாரிகளை நீக்கும்படி கூறுகிறார். கிராமத்தினர் கோபத்துடன் அப்பெரியவரை அடிக்க வர, தாழைகருப்புக்கும் ஊர்மக்களுக்கும் பயந்து அப்பெரியவர் ஒரு இடத்தில் பதுங்கி படுத்து உறங்குகிறார். அவர் கனவில் வந்த தாழைகருப்பு, கோபமுற்ற ’ காலையில் இவ்வூரில் உள்ள முளைப்பாரிகள் அனைத்தும் அழிந்துவிடும்’ என்று கூறி மறைகிறார். மருநாள் அவ்வாறே முளைப்பாரிகள் அனைத்தும் கருகிய நிலையில் காணப்படுகிண்றன. உடனே கிராமத்தினர் தாழைக்கருப்பைத் தேடிவருகின்றனர். அப்போது ஒத்தத்தாளை என்ற இடத்தில் பாம்பு வடிவில் தாழைகருப்பு அவர்களுக்குக் காட்சியளிக்கிறார். தாழைகருப்பு அவ்வூர் மக்களை, தன்னையும் தன் சகோதரர்களையும் அவ்விடத்தில் கோவிலமைத்து வழிபடுமாறு கூறியுள்ளார். மேலும் குழந்தையற்ற அந்த 60 வயதான காதுகேளாத பெரியவருக்கு பிள்ளை வரம் அளித்தார் என்றும் அவர் வழி வந்த வம்சாவளிகள் செவிவழிச் செய்தியாகக் கூறுகின்றனர். மேலும், இந்நிகழ்விற்க்குப்பின் அக்கிராமத்தில் யாரும் முளைப்பாரி வைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
தகவல்
முனைவர் மருதுபாண்டியன்
குறிப்புகள்
திரு. சுதர்சன்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
முனிக்கோயில்
செல்லும் வழி
மதுரை முதல் மேலூர் செல்லும் வழி
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
மீடியா கோப்புகள் இல்லை
No media Files