Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

ஏடகநாதர் கோயில்

Edaganathar Temple

பிற தெய்வத்தின் பெயர்கள்

ஏலவார்குழலி


அமைவிடம்

சோழவந்தான் செல்லும் சாலை, வைகை ஆற்றின் கீழ்க்கரையில் அமைந்துள்ளது.


தலத்தின் சிறப்பு

திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகம் மூன்றாம் திருமுறையில் பாடல் பெற்ற தலம்.


ஊர்

திருவேடகம்

மாவட்டம்

மதுரை

மூலவர் பெயர்
ஏடகநாதர்
தல மரம்
வில்வ மரம்
கோயில் குளம்/ஆறு
பிரம்ம தீர்த்தம், வைகை ஆறு
ஆகமம்
காமிகாகமம்
பூசைக்காலம்
காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தசாமம் ஆகிய காலங்களில் பூசைகள் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
சித்திரையில் மாதப்பிறப்பும், வைகாசியில் விசாகமும், ஆனி உத்திரத்தில் நடராஜருக்குத் திருமஞ்சனமும், ஆடிப்பூரத்தில் அம்பாளுக்குப் பூப்புனித நீராட்டும், ஆவணி அவிட்டத்தில் (பவுர்ணமி) ஏடு எதிர் ஏறிய உற்சவமும், ஐப்பசியில் சூரசம்காரமும், கார்த்திகையில் தீபத்திருவிழாவும், மார்கழியில் ஆருத்திரா தரிசனமும், தை மகத்தில் தெப்பத்திருவிழாவும், மாசியில் மகாசிவராத்திரியும், பங்குனியில் உத்திரமும் நடைபெறுகின்றன. கார்த்திகை மாத சோமவாரங்களில் சங்காபிஷேகம் நடைபெறுகிறது.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
சுவாமி மற்றும் அம்பாளுக்கு ஆடை அணிவித்தும், கோயில் திருப்பணிக்குப் பொருளுதவி செய்தும், நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். திருமணத் தடை உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வந்து தெய்வத்திற்கு அணிவித்த மாலையை அணிந்துகொண்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.
காலம்/ ஆட்சியர்
பாண்டியர்கள்
கல்வெட்டு / செப்பேடு
இத்தலம் "பாகனூர்க் கொற்றத்துத் திருவேடகம்" என்றும், இறைவன் பெயர் "திருவேடகம் உடைய நாயனார்" என்றும் இங்குள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் மொத்தம் 14 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றுள் மாறவர்மனாகிய திரிபுவனச் சக்கரவர்த்தியாகிய சுந்தரபாண்டியன் கல்வெட்டில் இவ்வூரில் இருந்த திருஞானசம்பந்தர் திருமடத்தில் 20 தபசியர் உண்பதற்காக நிலத் தானம் அளிக்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.
சுவரோவியம்
சதாசிவம் மற்றும் ஐஸ்வரியேஸ்வரரின் அண்மைக்கால ஓவியங்கள் காணப்படுகின்றன. 
சிற்பங்கள்
ஏடகநாதர், ஏலவார் குழலி, 63 நாயன்மார்கள், பால கணபதி, திருஞானசம்பந்தர், தட்சிணாமூர்த்தி, ஆறுமுகப்பெருமான், சப்தமாதாக்கள், சுப்பிரமணியர், நாகத் தெய்வம், சக்தி விநாயகர், நாகலட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், வாராகி அம்மன், நவக்கிரகங்கள், பூரணாம்பாள், ஐயனார், புஸ்தகாம்பாள் ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன.
தல வரலாறு / கதைகள்
பாண்டியநாட்டைக் கூன்பாண்டியன் என்னும் மன்னன் ஆட்சிசெய்தபோது திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்திருந்தார். அப்போது, சமணர்கள் ஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்குத் தீயிட்டனர் எனச் சொல்லப்படுகிறது. ஒரு தேசத்தில் அநியாயம் நடக்கிறது என்றால், அதன் பலனை அரசனே அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்த சம்பந்தர், "அந்தத் தீ அரசனையே சாரட்டும்' என்று பாடினார். உடனே கூன்பாண்டியனைத் தீயின் வெப்பம் வெப்புநோயாகத் தாக்கியது. அதைத் தாங்க முடியாமல் தவித்தார் அரசன். அரசனைச் சார்ந்திருந்த சமணமதத் துறவிகளால் அதைச் சரி செய்ய முடியவில்லை. தன் வெப்பு நோயைத் தீர்க்க அரசன் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்தான். ஞானசம்பந்தர் ’மந்திரமாவது நீறு' என்ற பதிகத்தைப் பாடி, மதுரை மீனாட்சியம்மன் கோயில் மடப்பள்ளி சாம்பலை அரசனுக்குப் பூசியதும், நோய் நீங்கியது. இதையடுத்து மன்னனின் மனம் சைவத்தை நோக்கிச் சென்றது. இதைத் தடுக்க நினைத்த சமணர்கள், சம்பந்தர் செய்தது சித்துவேலை என்றும், தாங்கள் அறிவிக்கும் போட்டியில் சம்பந்தர் வெற்றி பெற்றால், மதுரையை விட்டே போய்விடுவதாகவும் அறிவித்தனர். அதாவது, "அத்திநாத்தி” என்று எழுதிய ஏட்டைச் சமணர்களும், "வாழ்க அந்தணர்” என்று எழுதிய பதிக ஏட்டை ஞானசம்பந்தரும் வைகையாற்றில் விட வேண்டும். எவரின் ஏடு வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்படாமல் கரை ஒதுங்குகிறதோ அவரே வென்றவராவார் என முடிவு செய்யப்பட்டது. போட்டியின் போது சமணர் ஏடு ஆற்றோடு சென்றுவிட்டது. சம்பந்தர் 'வன்னியும் மத்தமும்' என்ற பதிகத்தைப் பாடினார். அப்போது ஏடு கரை சேர்ந்தது. அவ்வாறு ஏடு கரை சேர்ந்த இடமே திருவேடகம் என்று கூறப்படுகிறது.
கோயில் அமைப்பு
இக்கோயிலின் நுழைவாயிலிலுள்ள முற்றுப்பெறாத ‘மொட்டைக் கோபுரம்’ விஜயநகர அரசு காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில் நான்கு தூண்கள் கொண்ட முக மண்டபமும் 12 தூண்கள் கொண்ட அர்த்த மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையின் வலப்புறத்தில் தாயார் சந்திதி அமைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்கள்
கருவறையில் இலிங்க வடிவில் ஏடகநாதர் காட்சியளிக்கிறார். ஏலவார் குழலி கருவறையில் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். அம்மன் சந்நிதி கற்றூண் ஒன்றில் திருஞானசம்பந்தரின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள படித்துறையில் அன்னையர் எழுவர் சிற்பங்களும், திருஞானசம்பந்தர், கணபதி, ஆற்றில் எதிரேறி மிதந்து வரும் ஏடு, விடை வாகனத்தில் காட்சி தரும் அம்மையப்பர் ஆகிய சிற்பங்கள் தலபுராணத்தை விளக்கும் புடைப்புச் சிற்பங்களாக அமைந்துள்ளன. இக்கோயிலில் நாள்தோறும் அன்னதானம் நடைபெறுகிறது. திருமணஞ்சேரியில் திருமணத்தடை உள்ள ஆண், பெண்கள் பரிகாரப் பூசை செய்வது போல, இங்கும் பரிகாரப் பூசை செய்யப் படுகிறது. ஏலவார்குழலிக்கு மாலை அணிவித்து, அதை வீட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும். அம்மனை 8 நாட்கள் தொடர்ந்து பூசித்து வரத் திருமணத்தடை நீங்கப்பெற்று விரைவில் திருமணம் நடக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. திருமணத்திற்குப் பின் தம்பதியாக இங்கு வந்து சுவாமி மற்றும் அம்பாளை வழிபடுகின்றனர்.
தகவல்

முனைவர் மகாலிங்கம்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
துர்க்கை அம்மன்
செல்லும் வழி
சோழவந்தான் சாலை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவேடகம் பேருந்து நிறுத்தம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை தொடர்வண்டி நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை விமான நிலையம்

மீடியா கோப்புகள் இல்லை

No media Files