அகோபில நரசிம்ம பெருமாள் கோயில்
Agobila Narasimha Perumal Temple
மூலவர் பெயர்
அகோபில நரசிம்ம பெருமாள்
திருவிழாக்கள் விவரங்கள்
மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழா இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசிச் சனி வாரங்கள், கார்த்திகைச் சொக்கப்பனை ஆகிய விழாக்களும் இங்குச் சிறப்பாக நடைபெறும்.
சுவரோவியம்
நுழைவாயிலில் கருடன் மற்றும் ஆஞ்சநேயர் ஓவியங்கள் உள்ளன
சிற்பங்கள்
வாயில் காவலர்கள் (துவாரபாலர்கள்), 12 ஆழ்வாரகள், நுழைவாயில் அருகில் கை வணங்கி நிற்கும் ஆண், பெண் ஆகியோரின் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. ஆண், பெண் ஆகிய இருவரும் இக்கோயிலுக்கு நன்கொடையளித்த அரசரும் அரசியுமாக இருக்கலாம்.
கோயில் அமைப்பு
இக்கோயிலில் விமானத்துடன் கூடிய கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் ஆகிய அமைப்புகள் காணப்படுகின்றன. கோயில் நுழைவாயிலில் சிறிய கோபுரம் உள்ளது.
கூடுதல் விவரங்கள்
இக்கோயில் கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத நரசிம்ம பெருமாள் காட்சியளிக்கிறார். சுவாமி சந்நிதியின் வலப்பக்கத்தில் கமலவல்லித் தாயார் சந்நிதி தனியாக உள்ளது. மேலும், இவ்வளாகத்துள் விநாயகர் சந்நிதி, சிவன் சந்நிதி, கருடாழ்வார் சந்நிதி ஆகியனவும் அமைந்துள்ளன. மேலும் நான்கு கால் கல் மண்டபமும் தனியாக உள்ளது. கோயில் சுவரில் பல இடங்களில் மிகச்சிறிய புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளன. இவ்விடத்தில் இராம - இலட்சுமணர், யோக நரசிம்மர், ஆஞ்சநேயர், இலட்சுமி, உலகளந்த பெருமாள், அரங்கநாதர், நாராயணர் ஆகிய புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறையின் மேல் உள்ள விமானத்தில் விஷ்ணுவின் தசாவதாரச் சிலைகள் சுதைச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. இப்போது இக்கோயிலின் அதிட்டானப் பகுதி தரைக்குள் புதைந்து காணப்படுகிறது.
காலம்/ ஆட்சியர்
நாயக்கர் காலம்
தல வரலாறு / கதைகள்
மதுரை நாயக்கர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட பாளையங்களில் (ஒரு பாளையம் என்பது சில கிராமங்களைக் கொண்டது) நிலக்கோட்டை முதன்மையான ஒன்றாகும். இது மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய நகரங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது. இப்பகுதியை ஆண்ட மன்னர்களுள் கூளப்பநாயக்கர் புகழ் பெற்றவர். இவரது ஆட்சிக் காலத்தில், பொது ஆண்டு 1696ஆம் ஆண்டில், இக்கோயில் கட்டபட்டதாகக் கூறப்படுகின்றது. ’அகோபிலம்’ என்பது ஆந்திரப் பகுதியில் உள்ள ஊராகும். அங்கிருந்து புலம்பெயர்ந்து வந்து குடியேறிய அரச மரபினர் தங்களது பூர்வீக அடையாளத்தை நினைவுபடுத்தும் வகையில் அகோபில நரசிம்மர் கோவிலை உருவாக்கினர் என்று இப்பகுதி மக்களால் கூறப்படுகிறது.
தகவல்
க.த.காந்திராஜன்
மீடியா கோப்புகள் இல்லை
No media Files