அருள்மிகு சௌந்திரராஜப்பெருமாள் கோயில்
Soundararajaperumal Temple
பிற தெய்வத்தின் பெயர்கள்
சௌந்திரவல்லித்தாயார்
தலத்தின் சிறப்பு
இக்கோயிலின் ஊஞ்சல் மண்டபத்தில் ஒருபுறம் உள்ள ஏழு தூண்களும் 'சரிகமபதநி' என்ற சப்த ஸ்வரங்களின் ஒலிகளை எழுப்புகின்றன. நாள்தோறும் இக்கோயிலில் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
மூலவர் பெயர்
சௌந்திரராஜப்பெருமாள்
ஊர்
தாடிக்கொம்பு
மாவட்டம்
திண்டுக்கல்
தல மரம்
வில்வமரம்
கோயில் குளம்/ஆறு
குடகனாறு தீர்த்தம்
ஆகமம்
வைணவம்
பூசைக்காலம்
நாள்தோறும் மூன்றுகாலப் பூசைகள் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
சித்திரா பௌர்ணமி திருவிழா 6 நாட்களும், ஆடிப் பிரம்மோற்சவத் திருவிழா 14 நாட்களும், பெரிய கார்த்திகைக்கு அடுத்த நாள் இலட்சத் தீபத் திருவிழா, பங்குனி உத்திரத் திருக்கல்யாணத் திருவிழா ஆகிய திருவிழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.
இக்கோயில் முதன்மைக் கடவுளுக்கு ஒவ்வொரு மாதமும் திருவோணப் பூசை நடைபெறுகிறது. மேலும், வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களில் முன்னோர்களின் சாபம் நீங்க விஷ்ணுபதி புண்ணியக் காலப் பூசையும் நடைபெறுகிறது. ஸ்ரீ சுவர்ணா ஆகர்சண பைரவருக்குச் செய்யப்படும் தேய்பிறை அஷ்டமி பூசையானது சிறப்பு வாய்ந்ததாகும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
திருமணத்தடை நீங்க ரதி மன்மதன் சிற்பத்தை 5 வியாழக் கிழமைகள் வழிபடுகின்றனர். திருட்டுப் போன பொருட்களைத் திரும்பப் பெறுவதற்காகவும் நியாயமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்காகவும் இக்கோயில் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ கார்த்த வீர்ய அர்ஜுனரின் தூண் சிற்பத்தை வணங்குகின்றனர்.
கல்வெட்டு / செப்பேடு
இக்கோயிலில் பாண்டியர்காலத் துண்டுக்கல்வெட்டுக்களும், நாயக்கர் காலக் கல்வெட்டுக்களும் உள்ளன. இக்கோயில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டு விஜயநகர - மதுரை நாயக்கர் காலத்தில் புதுப்பித்துக் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதனை இக்கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகிறது. இக்கோயில் கருவறை, மண்டபம், பிரகாரங்கள் ஆகியவற்றில் முழுமையற்ற நிலையில் தமிழ்க் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றிலிருந்து முழுமையான செய்திகளை அறிய முடியவில்லை. சௌந்தரராசப்பெருமாள் கோயில் கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தின் தென்புறத்தில் பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டுத் துண்டுக் கல்வெட்டுகள் உள்ளன. ஒரு கல்வெட்டில் கோயிலின் பெயர் ’சுந்தரராசப்பெருமாள்’ என்று குறிப்பிடப்படுகிறது. திருவாத்தியாயன கல்யாண உற்சவத்திற்காகத் தானம் தந்ததை மற்றொரு கல்வெட்டு தெரிவிக்கிறது. முதல் பிரகாரத்திலுள்ள வடக்கு, தெற்கு மற்றும் மேற்குச் சுவர்களில் காணப்படும் துண்டுக் கல்வெட்டுகளும் பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பிற்காலப் பாண்டியர் காலத்தவையாகும். பாண்டிய அரசர் ஒருவர், தன் பிறந்த நாளான அஸ்த நட்சத்திரத்தன்று கோயிலில் சிறப்பு வழிபாடு செய்வதற்காக அவர் தானம் தந்ததையும், இக்கோயில் நிர்வாகத்தினர் பற்றியும் இவை கூறுகின்றன. மற்றொரு கல்வெட்டு அமரபுயங்கர சதுர்வேதிமங்கலம் பற்றித் தெரிவிக்கிறது. கருவறைச் சுவரிலுள்ள பொது ஆண்டு 15ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு இறைவன் பெயரால் எழுதப்பட்டதாகும். இதில் இக்கோயில் நிர்வாகம் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.
சுவரோவியம்
இக்கோயிலில் ஆண்டாள் மற்றும் பெரியாழ்வாரின் வாழ்க்கைக் கதை, கஜேந்திர மோட்சம் ஆகியவற்றின் சுவர் ஓவியங்கள் காணப்படுகின்றன.
சிற்பங்கள்
சுவர்ண ஆகர்ஷண பைரவர், ஸ்ரீ கார்த்த வீர்ய அர்ஜுனர், நின்ற கோலத்தில் கணபதி, மகிஷாசுர மர்த்தினி - துர்க்கா, திரிவிக்ரமன் - வேணுகோபாலன், மன்மதன் - ரதி, நரசிம்ம - ஹிரண்ய யுத்தம் - ஹிரண்ய வதம், ஊர்த்வ தாண்டவ -சிவ - காளி, ஸ்ரீ ராமர் - வீரபத்ரர், வைகுண்டமூர்த்தி - கருடன், நாராயணர், சக்கரத்தாழ்வார் ஆகிய சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக்கோயிலில் உள்ள மண்டபத் தூணில் கைவணங்கி நிற்கும் அரசர் போன்ற ஒருவரின் சிற்பமும் காணப்படுகின்றது. இவர் இக்கோயிலுக்குத் தானம் அளித்தவர்களுள் ஒருவராக இருக்கலாம்.
கோயில் அமைப்பு
இக்கோயிலில் கோபுரம், விமானத்துடன் கூடிய கருவறை, இடை நாழி, முன் மண்டபம், மகா மண்டபம், ஊஞ்சல் மண்டபம், அரங்க மண்டபம், சக்கரத்தாழ்வார் சந்நிதி, ஆண்டாள் சந்நிதி, சுவர்ண ஆகர்ஷண பைரவர் சந்நிதி ஆகியவை காணப்படுகின்றன.
கூடுதல் விவரங்கள்
இக்கோயிலின் நாற்புறமும் பெரிய மதிற் சுவர்கள் உள்ளன. இங்கு ஐந்து சந்நிதிகள் உள்ளன. இக்கோயில் கருவறையின் வெளிப்புறச் சுவரில் உள்ள தேவகோட்டங்களில் தெய்வச் சிற்பங்கள் காணப்படவில்லை. மேலும், கோயில் சுவர்களில் நரசிம்மர், நடராசர், பூதகணங்கள், சிம்மங்கள், யாளிகள், இராமர், துர்க்கை, ஊர்த்தவ தாண்டவ மூர்த்தி, யோக நரசிம்மர், வேணுகோபாலர், இலட்சுமி, விநாயகர் மற்றும் பல புடைப்புச் சிற்பங்கள் வரிசையாகச் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோயிலிலுள்ள மகாமண்டம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் அரங்க மண்டபத்தில் உள்ள தூண்களும் அதிலுள்ள சிற்பங்களும் மிக நேர்த்தியான கலைப்படைப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தில் இசைத் தூண்கள் காணப்படுகின்றன. அரங்க மண்டபத்தில் உள்ள பதினான்கு தூண்களில் பிரம்மாண்டமாக ஒற்றைக் கல்லால் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மகாபாரதம், இராமாயணம் தொடர்பான சிற்பங்களோடு பிற சைவ, வைணவம் தொடர்பான சிற்பங்களும் காணப்படுகின்றன. வைணவ மற்றும் சைவக் கருப்பொருள்கள் ஒன்றோடொன்று இணைக்கப்படுவது நாயக்கர் கோயில்களில் அவ்வப்போது பின்பற்றப்பட்டது. அந்த வகையில் இக்கோயிலில் சைவ, வைணவ கருத்துக்கள் பிரிவினையின்றிக் காணப்படுகின்றன. இது ஆட்சியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருக்கும் சகிப்புத்தன்மையைப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.
காலம்/ ஆட்சியர்
பிற்காலப் பாண்டியர் காலம்
தல வரலாறு / கதைகள்
குடகன் ஆற்றங்கரையில் மண்டூக (தவளை) முனிவர் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்குவதற்கு மதுரை திருமாலிருஞ்சோலைக் கள்ளழகரை நோக்கி இத்தலத்தில் தவமிருந்தபோது தளாகரன் என்கிற அசுரனால் மண்டூக முனிவருக்கு இடையூறு ஏற்பட்டது. மதுரை திருமாலிருஞ்சோலைக் கள்ளழகரே அந்த அசுரனை வதம் செய்து, முனிவரின் வேண்டுகோளை ஏற்று இவ்வூரில் சௌந்திரராஜப் பெருமாளாக அருள்புரிகிறார். எனவே, இக்கோயில் ’அழகர் திருக்கோயில்’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.
தகவல்
க.த.காந்திராஜன்
குறிப்புகள்
திருக்கோயில்கள் வழிகாட்டி- திண்டுக்கல் மாவட்டம், பக்கம் 22.
மீடியா கோப்புகள் இல்லை
No media Files