Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

சிவன் கோயில்

Shivan temple

கோயிலின் வேறு பெயர்

மதுரோதைய ஈஸ்வரமுடைய நாயனார்


தலத்தின் சிறப்பு

இவ்வூர் 800 ஆண்டுகளுக்கு முன்னர் ’கேரளாந்தகபுரம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. கேரளாந்தகன் என்பது முதலாம் இராசராச சோழனின் சிறப்புப் பெயராகும். இவ்வூர் பண்டைய பெருவழிப் பாதையில் அமைந்துள்ளது.


காலம்/ ஆட்சியர்

பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலப் பாண்டியர் கோயில்.


ஊர்

குன்னுவராயன் கோட்டை

மாவட்டம்

திண்டுக்கல்

கல்வெட்டு / செப்பேடு
இக்கோயிலில் கல்வெட்டுகள் கோயிலின் வடப்பக்க அதிட்டானத்தில் உள்ளன. ஏனைய ஒருசில கல்வெட்டுகள் சிதைந்த நிலையில் உள்ளன. இதில் உள்ள கல்வெட்டுகளின் தகவல்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இங்குக் காணப்படும் கல்வெட்டுகள் வணிகப்பெருவழி, பதினெண் விஷயத்தார் என்னும் வணிகக் குழுவினர், சுங்க வரி வசூல் பற்றிய தகவல்களைக் கொண்டவையாக உள்ளன. இக்கோயிலில் பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (பொ.ஆ. 1216 – 1239) காலத்தைச் சார்ந்தது. இக்கல்வெட்டு இக்கோயிலுக்கு வரி நீக்கப்பட்ட நிலம் (தேவதானமாக) கொடுக்கப்பட்டதைக் கூறுகிறது. இங்குள்ள மற்றொரு, பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு இவ்வூர் வழியாக வணிகச் சரக்குகள் கொண்டு செல்லப்பட்டதையும், கிழக்குத் திசை (மதுரை) நோக்கிச் சென்ற சரக்குகளில் பொதி ஒன்றுக்குச் சிவன் கோயிலுக்கு ஒரு புதுக்காசும், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு அரைப் புதுக்காசும் தானமாகக் கொடுக்க வேண்டும் என்று ’பதினெண் விசைய வணிகர்’ குழுவினரால் முடிவெடுக்கப்பட்டதைக் கூறுகிறது. கல்வெட்டு 1 : 1)த்துக்கும் பலபடி ந(நி)மந்தங்களுக்கும் பதினெண்விஷையமும் மதுரமாந 2)கரமும் நாலு நகரமும் இட்டு (வீசி) வட்டை நடந்து சமையதன்மை (இனது) 3)நடாத்துகின்ற பதினெண்விசையத்தோமும் அமைந்துடைத்துக்கு சே 4)த சாரிகையாவது கிழக்குப் (பேரம்) பொதிக்கு மதுரை உதைய ஈஸ்வரமுடை 5)யநாயனாற்குப் பொதிக்கு ஒருபுதுக்காசும் கண்ணுடை விண்ணகர எம் 6)பெருமாளுக்குப் பொதிக்கு அரைப்புதுக்காசும் இரண்டு பொருளுக்குங் கிழ 7)க்கு நோக்கிப் போகிற பொதிகளிலே கொள்வதாகவும் இப்படி சம்மதித்து 8) கல்வெட்டிவித்துக் குடுத்தோம் நான்கு திசைத் தெ…த் திசை ……. திசை கல்வெட்டு 2 : 1)னெண் பூமி முனை 2)து சந்திராதித்த 3)பூமித் தே…சி மாத 4)சமையக் கணக்கு 5)சய்ய ெ… து கல 6)பனான் சி மு(ல)த்தா
தல வரலாறு / கதைகள்
இப்போது கண்ணாபட்டி / குன்னுவாரன் கோட்டை என்று அழைக்கப்படும் இவ்வூர் 800 ஆண்டுகளுக்கு முன்னர் ’கேரளாந்தகபுரம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. கேரளாந்தகன் என்பது முதலாம் இராசராச சோழனின் பெயராகும். இவ்வூர் பண்டைய பெருவழிப் பாதையில் அமைந்துள்ளது. இராசராச சோழனின் காலத்தில் இந்த வணிக நகரம் உருவாகி இருக்கலாம். இங்குச் சிதைந்த நிலையில் காணப்படும் இந்தக் கோயிலின் சிவன் முற்காலத்தில் ’மதுரோதைய ஈஸ்வரமுடைய நாயனார்’ என்று அழைக்கப்பட்டுள்ளார் என்பதை இங்குள்ள கல்வெட்டுக்களின் மூலம் அறியமுடிகிறது.
கோயில் அமைப்பு
முற்றிலும் கல்லால் கட்டப்பட்டுள்ள இக்கோயில் இப்போது சிதைந்த நிலையில் காணப்படுகிறது.
கூடுதல் விவரங்கள்
இந்தப் பழைய கோயிலின் சிவலிங்கமும் நந்தியும் இப்போது புதுப் பீடங்களின் மேல் வைக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றன. இந்தச் சிவலிங்கத்திற்கு வட்ட வடிவ ஆவுடையார் உள்ளது. கோயில் கருவறையின் நுழைவாயில், கருவறையின் சுவர்கள், அதிட்டானப் பகுதி ஆகியவை சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. அதிட்டானப் பகுதியில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோயிலின் பிற பாகங்களும், புடைப்புச் சிற்பங்கள் உள்ள சுவர்ப் பகுதிகளும், இவ்விடத்தைச் சுற்றிச் சிதறிக் கிடக்கின்றன.
தகவல்

க.த.காந்திராஜன்

செல்லும் வழி
வத்தலக்குண்டிலிருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் பத்துக் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குன்னுவராயன்கோட்டை
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
வாடிப்பட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை

மீடியா கோப்புகள் இல்லை

No media Files