பட்டாணி கோயில்
Pattāni Temple
அமைவிடம்
பாடியூர் சாலையோரம் அமைந்துள்ளது.
தலத்தின் சிறப்பு
இஸ்லாமிய (முஸ்லிம்) மன்னர்கள் மற்றும் இஸ்லாமிய வீரர் சிலைகளை, இஸ்லாம் அல்லாத மக்கள் வழிபட்டு வருவதே இக்கோயிலின் சிறப்பு.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
இக்கோயிலில் பக்தர்கள் ஆடுகள் மற்றும் கோழிகளைப் பலியிட்டு வழிபட்டு வருகின்றனர்.
ஊர்
பாடியூர்
மாவட்டம்
திண்டுக்கல்
சிற்பங்கள்
குதிரைகள் மற்றும் வீரர்கள்
கோயில் அமைப்பு
இது ஒரு திறந்தவெளி வழிபாட்டுத் தலம் ஆகும். ஒரு மேடைமேல் பல வீரர்களின் சிலைகள் காணப்படுகின்றன.
கூடுதல் விவரங்கள்
சாலையோரம் அமைந்துள்ள இக்கோயில் பார்ப்பதற்கு ஐயனார் கோயில் போலத் தோற்றமளிப்பினும், இது ’பட்டாணி கோயில்’ என்று அழைக்கப்படும் அரிய வகைக் கோவிலாகும். இவ்விடத்தில் உள்ள இஸ்லாமிய (முஸ்லிம்) மன்னர்கள் மற்றும் வீரர்களின் சிலைகளை இப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த வழிபாட்டுத் தலத்தில் பக்தர்கள் ஆடுகள் மற்றும் கோழிகளைப் பலியிட்டு வழிபட்டு வருகின்றனர். இந்தச் சுதைச் சிற்பங்களில் காணப்படும் ஆட்கள் இஸ்லாமிய அரசர்கள் மற்றும் வீரர்கள் போன்ற உடை, குல்லா, மீசை, தாடி மற்றும் காலணியுடன் காணப்படுகின்றனர். இவர்கள் போரில் இறந்த வீரர்களாக இருக்கலாம். இவ்விடத்தில் மேடை போன்ற அமைப்பின் மேல் ஆறு பெரிய குதிரைகளும், மேடையின் கீழ் ஒரு சிறிய குதிரையும் காணப்படுகின்றன. இவற்றுள் நான்கு பெரிய குதிரைகளின் மேல் அமர்ந்துள்ள வீரர்கள் கிழக்குத் திசையை நோக்கி உள்ளனர், மற்ற இரண்டு பெரிய குதிரைகளின் மேல் உள்ள வீரர்கள் வடக்குத் திசையை நோக்கியபடி வடிவமைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆறு குதிரைகளில் மூன்று குதிரைகள் தங்கள் முன்னங்கால்களை உயர்த்திப் பூதக்கணங்களின் தலை மேல் வைத்துள்ளனர். குதிரையின் மேல் வடிவமைக்கப்பட்டுள்ள ஆண் உருவங்களில் சிலர் இடைக்கால மன்னர்கள் போலவும் மற்ற சிலர் சிப்பாய்கள் போலவும் உடை உடுத்துள்ளனர். இம்மேடையின் மேல் இரண்டு சிறிய சந்நிதிகள் அமைக்கப்பட்டு அவற்றுள் சிப்பாய் போன்ற வீரர்களின் உருவங்கள் காணப்படுகின்றன. சிப்பாய்கள் துப்பாக்கி பிடித்துள்ளனர். பிற வீரர்கள் வாள் ஏந்தி உள்ளனர்.
தகவல்
க.த.காந்திராஜன்
மீடியா கோப்புகள் இல்லை
No media Files