Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

மூலநாதசுவாமி கோயில்

Moolanathasamy Temple

கோயிலின் வேறு பெயர்

சிவன் கோயில்


பிற தெய்வத்தின் பெயர்கள்

அகிலாண்டேஸ்வரி அம்மன்


மூலவர் பெயர்

மூலநாதசுவாமி


ஊர்

தென்கரை

மாவட்டம்

மதுரை

தல மரம்
வில்வ மரம்
கோயில் குளம்/ஆறு
தெப்பக்குளம் உள்ளது.
ஆகமம்
சிவாகமம்
பூசைக்காலம்
நாள்தோறும் வழிபாடு நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், விசாகம், சித்திரை பிறப்பு, நவராத்திரி உற்சவம், ஐப்பசி உற்சவம், சங்காபிஷேகம், அஷ்டமிசப்பரம், திருவாதிரை உற்சவம் ஆகியவை நடைபெறுகின்றன.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
திருமணம் நடைபெற, குழந்தைவரம் பெற, வியாபார விருத்தி அடைய, உடல் நலம் பெற இங்குப் பல்வேறு திரவியங்களால் பக்தர்கள் அபிஷேகம் செய்கின்றனர். மூன்று திங்கட்கிழமைகளில் நெய்விளக்கேற்றிப் பொங்கல் படைத்துப் பூசை செய்து தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
காலம்/ ஆட்சியர்
பிற்காலப் பாண்டியர் காலம்
சிற்பங்கள்
சரஸ்வதி, மகாலட்சுமி, நவக்கிரகங்கள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாசபெருமாள், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி, துர்க்காதேவி, காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரி ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன.
தல வரலாறு / கதைகள்
ஒரு சமயம் பார்வதி தேவி பரமேசுவரனிடம் ’பூவுலக மக்கள் நல்வழிப் பாதையிலிருந்து விலகிக் கேடுகளைத் தேடிக்கொண்டு அல்லல்படுகிறார்கள். அவர்கள் நல்வாழ்வு பெற அவர்களுக்கு வழிகாட்டுவதற்கு உலகத்திற்கு ஒருவரை அனுப்பி வைக்கவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். தேவியின் இந்த வேண்டுகோளை ஏற்று, நந்தீசுவரரை அருகே அழைத்தார் ஈசன். ’தேவியின் வார்த்தைகளுக்கு இணங்க உன் சீடனான மூலனை உலகிற்கு அனுப்பி வைப்பாயாக' என்றார். நந்தியும் தன் சீடனான மூலனை உலகிற்குச் செல்லுமாறு ஆணையிட்டார். மூலனும் பூலோகத்திற்கு வந்து, பில்வாரண்யத்தை / வில்வவனத்தை அடைந்தார். மூலன் அந்த வில்வவனத்தில் ஓர் இடத்தில் அமர்ந்து கடும் தவம் செய்யத் தொடங்கினான். ஒரு கட்டத்தில் மூலனின் தவத்தை மெச்சி அவனுக்கு இறைவன் ஜோதி லிங்க சொரூபமாய்க் காட்சி தந்து அருளினார். ஆக வில்வ வனத்தில் மூலனுக்குக் காட்சி தந்த காரணத்தால் இக்கோயில் இறைவனுக்கு ’ஸ்ரீ மூலநாதர்’ என்ற பெயர் ஏற்பட்டதாகத் தல வரலாறு உள்ளது.
கோயில் அமைப்பு
இக்கோயிலில் ராஜகோபுரத்தை அடுத்து நூறு கால் மண்டம், மகாமண்டபம், அர்த்த மண்டபம் ஆகியன உள்ளன. ஆடி வீதியில் சரஸ்வதி, மகாலட்சுமி சந்நிதி, நவக்கிரகங்கள், மேற்குத்திசையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாசபெருமாள், வடக்கில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி, துர்க்காதேவி, காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரி அம்மன் என ஒவ்வொரு தெய்வங்களுக்கும் தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன.
கூடுதல் விவரங்கள்
இக்கோயில் முதலில் சோழன் தலை கொண்ட வீரபாண்டியன் காலத்தில் (பொது ஆண்டு 946-966) கட்டப்பட்ட சிவன் கோவிலாகும். கால வெள்ளத்தில் அது சிதைந்துவிடவே அதே அடித்தளத்தில் பராக்கிரம பாண்டியனால் (பொது ஆண்டு 1087 - 1104) கட்டப்பட்டுள்ளது. வீரபாண்டியனால் கட்டப்பட்ட வீரசேகர விண்ணகரம் என்னும் பெருமாள் கோவிலும் சிதைந்து போனது. அக்கோயிலின் கல்தூண்களும் மூலநாத சுவாமி கோயிலில் வைத்துக் கட்டப்பட்டுள்ளன. அம்மன் மற்றும் சுவாமியின் சந்நிதிக்கு முன் நந்தீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். பூர்ணபுஷ்பகரணியான புனிதத் தெப்பக்குளம் அம்மன் சந்நிதிக்கு முன் அமைந்துள்ளது. தோஷ நட்சத்திரம் கொண்ட பெண்கள் மஞ்சள் அரளிப்பூ, நாகலிங்க இலை பூவால் இத்தலத்தில் பூசை செய்தால் தோஷம் தீர்ந்து மங்களக் காரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை. தெப்பக் குளத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் குளித்து, தீர்த்தத்தை அருந்தினால் தீராத தோல், உடல்நோய் அகலும். அன்னதானம் செய்தால் குடும்பநலம், சுபகாரியங்கள் நடக்கும் என்பது இக்கோயில் பக்தர்களின் நம்பிக்கை.
தகவல்

முனைவர் மகாலிங்கம்

குறிப்புகள்
Madurai mavatta tholliyal kaiyedu PAGE 150
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
கிருஷ்ணன் கோயில்
செல்லும் வழி
தென்கரை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தென்கரைப் பேருந்து நிறுத்தம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
சோழவந்தான் தொடர் வண்டி நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை விமான நிலையம்

மீடியா கோப்புகள் இல்லை

No media Files