திருப்பூவனநாதர் கோயில்
Thiruppoovanathar Temple
தலத்தின் சிறப்பு
பூவனநாதர் திருக்கோயில் சுமார் 1300 ஆண்டுகள் பழைமையான, தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமாகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், கருவூர்த்தேவர், சுந்தரர் ஆகியோர் இத்தலத்தைப் பாடியுள்ளனர். இத்தலத்தினை மாணிக்கவாசகரும், திருவாசகத்தில் குறித்துள்ளார்.
மூலவர் பெயர்
புஷ்பவனேஸ்வரர், பூவனநாதர்
தல மரம்
பலா
கோயில் குளம்/ஆறு
வைகை
பூசைக்காலம்
ஆறு காலப் பூசை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
சிவராத்திரி, பங்குனிப் பெருவிழா, தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 12ஆம் நூற்றாண்டு / பிற்காலப் பாண்டியர்
கல்வெட்டு / செப்பேடு
இக்கோயிலுக்குப் பின்புறத் திருச்சுற்றுச் சுவரில் பிற்காலப் பாண்டியர் காலத்துக் கல்வெட்டுகள் உள்ளன. இவை இக்கோயிலுக்கு அளிக்கப்பட்ட தானங்கள் பற்றித் தெரிவிக்கின்றன. முதலாம் ஜடாவர்மன் குலசேகரன் (பொது ஆண்டு 1190-1217) என்பவரின் திருப்புவனம் செப்பேடு, 1200 நிலங்களை ஒன்றிணைத்து ’ராஜகம்பீர சதுர்வேதிமங்கலம்’ என்று பெயரிட்டு 1080 அந்தணர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட செய்தியைப் பதிவு செய்கிறது. மீதமுள்ள 120 நிலங்கள் திருப்பூவனநாதர்/ புஷ்பவனேஸ்வரர் கோயிலுக்குக் கொடையாக அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறது. இதன் எல்லைகள் யானைமீது ஏறி வலம் வந்து குறிக்கப்பட்டு, அதிகாரிகளால் அரசனின் ஆணையாக எழுதப்பட்டுச் செப்பேடாக வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் இவ்வூர்களோடு மேலும் சில ஊர்கள் தானமாக அளிக்கப்பட்டு மற்றொரு திருப்பூவனச் செப்பேடு அளிக்கப்பட்டுள்ளது.
கோயிலின் வடமேற்கு மூலை திருச்சுற்று நடைபாதையில்
பதிக்கப்பட்டிருக்கும் கல்வெட்டில் சடையன் மாறனின் (இராசசிம்மனின்) இரண்டாவது ஆட்சியாண்டில் குணவூர் அய்யன் மணக்காடு உடையான் என்பவனின் அக்கனும் (அக்காள் ) வீரபாண்டிய வீணைமாராயன் ஆயின அரையன் வீரநாராயணன் என்பவனின் மணவாட்டியுமான கொம்மணசாமி என்பவர் சிரி கோயில் எடுத்து பிரதிட்டை செய்து அக்கோயிலில் ஒரு நந்தாவிளக்கு எரிப்பதற்காக எழுபத்தைந்து ஆடுகள் திருப்புவனத்துத் தேவர் வெட்டிக்குடி (இடைக்குடி) பூவணவன் அரையன் என்பவனுக்கு அளித்ததைத் தெரிவிக்கிறது. இவற்றைப் பெற்றுக்கொண்ட பூவணவன் அரையன் நிசதம் திருப்புவனத்துத் தேவர்க்கு நாள்தோறும் உழக்கு நெய்க்குக் குறையாமல் அளிக்கவேண்டுமென்றும் இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. கோயில் கிழக்குப்புறச் சுவரின் வெளிப்புறத்தில் சாலையில் கிடக்கும் உடைந்த தூணில் உள்ள கல்வெட்டில் சடையன்மாறனின் (இராசசிம்மன்) நான்காம் ஆட்சியாண்டில் திருப்புவனத்துப் படாரர்க்கு ஒரு நந்தாவிளக்கு எரிப்பதற்காகச் சேர மன்னனான சேரமாநார் இராசாதித்தவர்மரான கோக்கோனதவர்மர் நூறு ஆடுகள் அளித்ததைத் தெரிவிக்கின்றது.
சுவரோவியம்
உட்கூரையில் அலங்கார ஓவியங்கள் உள்ளன.
சிற்பங்கள்
இங்குள்ள பெரிய நடராசமூர்த்திச் சிற்பம் அற்புதமான வேலைப்பாடுடையதாகவும் அழகு மிக்கதாகவும் உள்ளது. ஆலய நுழைவாயிலில் திருமலை நாயக்கர், திருமலை நாயக்கர் பிரதானி ஜெயா தீட்சிதர் ,சொக்கப்ப நாயக்கர், நடன மாது பொன்னனையாள் ஆகியோரின் சிலைகள் காணப்படுகின்றன.
தல வரலாறு / கதைகள்
பல காலம் முன்பு பொன்னனையாள் என்ற நாட்டியப் பெண் இவ்வூரில் வாழ்ந்து வந்தார். அவர் சிவனுக்காக ஒரு தங்கத் திருமேனி செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அவரிடம் போதிய பணம் இல்லை. எனவே இறைவன் சித்தராக அவர் முன் தோன்றினார். அவரின் பக்தியைக் கண்டு இறைவன் மகிழ்ந்து, இரசவாதம் என்னும் திருவிளையாடலை நிகழ்த்தித் தங்கம் உருவாக்கிக் கொடுத்த தலம் இதுவேயாகும். அதைக் கொண்டு அப்பெண் சிவலிங்கம் அமைத்து வழிபட, அது மிகவும் அழகாயிருப்பதைக் கண்டு ஆசையுடன் அந்தச் சிவலிங்கத்தைக் கிள்ளி முத்தமிட்டாளாம். இவ்வாறு கிள்ளிய அடையாளம் சிவலிங்கத்தில் உள்ளதை இன்றும் காணலாம் என்று சொல்லப்படுகிறது. முன் மண்டப வாயிலில் பொன்னனையாளின் கைகூப்பிய உருவம் காணப்படுகிறது.
பொது ஆண்டு 1543இல் கந்தசாமிப் புலவரால் "திருப்பூவனப் புராணம்" என்ற தல புராணம் எழுதப்பட்டுள்ளது. இங்கு வைகையாறு வடக்கு நோக்கி - உத்தரவாகினியாகப் பாய்கிறது. எனவே இவ்விடம் மிகவும் விசேஷமானதாகும். இறந்தோரின் எலும்புகளை இங்குப் புதைப்பதால் அவர்கள் நற்கதியைப் பெறுகிறார்கள் என்பது நம்பிக்கை. சைவக் குரவர்கள் நால்வர் திரிபுவனத்திற்கு வந்தபோது அங்கிருந்த வைகை ஆற்றின் மணல் எல்லாம் சிவலிங்கங்களாக காட்சி அளித்ததால் அவற்றின் மீது கால் வைக்க அஞ்சிய அவர்கள் மறுபக்கக் கரையிலிருந்தே சிவனை வழிபட விரும்பினர். அப்போது சிவலிங்கத்தை நந்தி மறைத்துக் கொண்டிருந்ததால் அவர்கள் நந்தியை விலகி இருக்குமாறு வேண்டிக் கொண்டனர் என்று சொல்லப்படுகிறது. இதனால் இக்கோயில் நந்தி சாய்ந்துள்ளதைக் காணலாம் என்கின்றனர். வைகையின் மறுகரையிலிருந்து அவர்கள் தொழுத இடம் இப்போது மூவர் மண்டபம் என்று வழங்கப்படுகிறது. (பழைய மண்டபம்) திருவாசகத்திலும், கருவூர்த்தேவரின் திருவிசைப்பாவிலும் இத்தலம் புகழப்படுகிறது. இவ்வூர் (1) பழையூர் (2) புதூர் (3) கோட்டை (4) நெல் முடிக்கரை என நான்கு பகுதிகளாகவுள்ளது. இவற்றுள் ‘கோட்டை’ எனும் பகுதியில் திருக்கோயில் உள்ளது. குலசேகர பாண்டியன் இந்நகரில் முடிசூட்டிக் கொண்ட விழாவில் நெற்கதிரை முடியாகச் சூடிக்கொண்டான். எனவே இத்தலத்திற்கு நெல்முடிக்கரை என்ற பெயருண்டாயிற்று. இத்தலத்திற்கு புஷ்பவனகாசி, பிதுர்மோட்சபுரம், பாஸ்கரபுரம், இலட்சுமிபுரம், பிரமபுரம், ரசவாதபுரம் என்ற பெயர்களும் உள்ளன.
கோயில் அமைப்பு
இவ்வாலயம் கிழக்கு மேற்காக 400 அடி நீளமும். தெற்கு வடக்காக 327 அடி அகலமும் கொண்டுள்ளது. கோயிலின் முகப்பில் திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட ராஜகோபுரம் முற்றுப்பெறாத நிலையில் விடப்பட்டுள்ளது. இதேபோன்று கட்டத் தீர்மானிக்கப்பட்ட 64 மண்டபங்களில் பெரும்பாலானவை முற்றுப்பெறாமல் உள்ளன. இந்தக் கோபுரத்தினை ஒட்டிப் பொன்னனையாள் மண்டபமும், அதனையடுத்துத் தங்குவதற்கு ஏற்ப மண்டபம் திருமலை நாயக்கர் மகாலையொத்து மாடம் போன்று கூரை அமைப்புடன் கட்டப்பட்டுள்ளன. இம்மண்டபங்களுக்கு முன்பாக மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் விமானத்தில் மூன்று அடுக்குகள் காணப்படுகின்றன. இக்கோயிலின் விமானத்தில் காணப்படும் சிகரப்பகுதி வட இந்திய நகரப் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் நான்கு பிரகாரங்கள் உள்ளன.
கூடுதல் விவரங்கள்
அர்த்தமண்டபத்தில் விநாயகர் மற்றும் சுப்பிரமணியனின் சிற்பங்கள் காணப்படுகின்றன. தேவகோட்டத்தில் தட்சணாமூர்த்தி லிங்கோத்பவர் துர்க்கை ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. வள்ளி மற்றும் தேவயானி உடன் முருகன் தனிச் சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் வட மேற்குப் பகுதியில் மகா லட்சுமிக்கும் தனியான சந்நிதி உள்ளது. முதல் திருச்சுற்றில் சண்டிகேஸ்வரருக்குத் தனிச் சந்நிதி உள்ளது. இதைத்தவிர பிர்மதண்டேஸ்வரர், மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், சூரியன், சந்திரன் மற்றும் பைரவர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. இக்கோயிலில் உள்ள கொடுங்கைகள் மிகவும் அழகாக உள்ளன. வைகை ஆற்றின் தண்ணீர் கோயிலில் அபிஷேகம் செய்யப் பயன்படுகிறது. இரண்டாவது திருச்சுற்றில் பல தூண்களைக் கொண்ட மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திருச்சுற்றில் அம்மனுக்குத் தனிச் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் பிற்காலத்தில் திருப்பணி செய்யப் பெற்றமையால் முற்காலப் பாண்டியர் காலத்திலிருந்த கோயிலின் வடிவம் சிதைந்துவிட்டது. அவற்றிலிருந்த பகுதிகள் இக்கோவிலைச் சுற்றிச் சிதைந்து கிடக்கின்றன. இப்போதுள்ள இக்கோயிலில் பொ.ஆ. 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சோமாஸ்கந்தர் செப்புத் திருமேனியும் பொ.ஆ 9-10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த துர்க்கை, சப்தமாதர்கள் சிலைகளும் காணப்படுகின்றன.
தகவல்
க.த.காந்திராஜன்
குறிப்புகள்
தகவலாற்றுப்படை, சிவகங்கை மாவட்டம் தொல்லியல் கையேடு பக்கம் - 81 Mrs. Devshri's data
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
நரிக்குடி சிவன் கோயில், மானாமதுரை சிவன் கோயில், பூம்பிடாகை அம்மன் கோயில்
செல்லும் வழி
இத்தலத்திற்கு மதுரையிலிருந்து செல்லலாம்.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருப்புவனம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மானாமதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
மதுரை நகர் விடுதிகள்
மீடியா கோப்புகள் இல்லை