திருநோக்கிய அழகியநாதர் கோயில்
Thirunokiya Azhagiyanathar Temple
கோயிலின் வேறு பெயர்
திருப்பாச்சேத்தி கோயில்
பிற தெய்வத்தின் பெயர்கள்
இறைவி மருநோக்கும் பூங்குழலி
அமைவிடம்
சிவகங்கை மாவட்டத்தில் மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் நெடுஞ்சாலையில் திருப்புவனம் அருகே வைகை ஆற்றின் தென்கரையில் திருப்பாச்சேத்தி என்ற ஊர் அமைந்துள்ளது.
ஊர்
திருப்பாச்சேத்தி
மாவட்டம்
சிவகங்கை
தலத்தின் சிறப்பு
மரகதத்தால் ஆன சிறிய லிங்கம் இங்கு உள்ளது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவனுக்குத் துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது. இக்கோயிலில் உள்ள கஷ்ட நிவாரண பைரவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். மேலும் இங்குள்ள நடராசர் சிலை தனித்துவமான இசைக் கல்லால் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மூலவர் பெயர்
திருநோக்கிய அழகியநாதர்
தல மரம்
பாரிஜாதம்
கோயில் குளம்/ஆறு
இலட்சுமி தீர்த்தம்
பூசைக்காலம்
மூன்று காலப் பூசை
திருவிழாக்கள் விவரங்கள்
மகா சிவராத்திரி, ஆனித் திருமஞ்சனம், மார்கழித் திருவாதிரை, சோம வாரம் உள்ளிட்ட நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் இக்கோயில் இறைவனுக்கு அபிஷேகம், பொருளுதவி மற்றும் அன்னதானம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 12ஆம் நூற்றாண்டு / பாண்டியர்கள்
கல்வெட்டு / செப்பேடு
கோயில் கருவறையின் முன்மண்டப உட்புறச் சுவரிலும், முப்பட்டைக் குமுதப் பகுதியிலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சடாவர்மன் குலசேகரன் (பொ.ஆ 1190-1223), மாறவர்மன் சுந்தர பாண்டியன் (பொ.ஆ 1216-1238), சடாவர்மன் விக்ரம பாண்டியன் (பொ.ஆ1241-1254), சதாசிவதேவ மகாராஜா (பொ.ஆ 15420 – 15420) ஆகியோரின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோயில் சுவர்களில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டின் இறுதியில் சடாவர்ம குலசேகர பாண்டியன் காலத்தில் 40 அந்தணர் குடும்பங்கள் இவ்வூரில் குடியேற்றப்பட்டுள்ளனர் என்ற செய்தி கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. மேலும் இவ்வூரில் பல கோயில்கள் இருந்திருப்பதை இங்குள்ள பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. திருப்பாச்சோற்றி உடைய நாயனார், திருவேங்கட விண்ணகர ஆழ்வார், ஐயனார் குளிர் கா உடையார், தந்தீஸ்வரமுடையார், பிடாரியார் என்று இக்கோயில் தெய்வங்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. சுந்தரபாண்டியன் காலத்தில் இக்கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலங்களுக்கான வரிகள் விலக்கப்பட்டுள்ளன. தற்போது இவ்வூரில் உள்ள பெருமாள் கோயில் முற்காலத்தில் மலை மண்டல விண்ணகர ஆழ்வார் என்று பெயர் பெற்று விளங்கியுள்ளது. விக்கிரம பாண்டியன் காலத்தில் இதற்குக் கன்னட பிராமணர் ஒருவர் வழிபாடு நடத்துவதற்காக நிலங்கள் அளித்துள்ளார். பொது ஆண்டு 1550இல் திருப்பாச்சோற்றி என்ற இவ்வூரின் பெயர் சதாசிவ தேவராயபுரம் என்று விஜயநகர மன்னரின் பெயரில் மாற்றப்பட்டிருக்கின்றது. அம்மன்னர் இராமராஜவிட்டல தேவ மகாராஜா சர்வேஸ்வர குருக்கள் என்ற சைவ சமயக் குரவருக்கு இவ்வூரைத் தானமாக அளித்துள்ளார். ஆனால் இவ்வழியில் இராமேஸ்வரம் செல்லும் பயணிகளிடமிருந்து வரி வசூலிக்கக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்ட செய்தியும் கல்வெட்டுகளின் மூலம் தெரிகிறது.
சுவரோவியம்
மீனாட்சி சுந்தரேசுவர் கல்யாணக் காட்சி, கொடிமரத்தின் அருகில் உள்ள நுழைவாயிலின் மேல் காணப்படுகிறது.
சிற்பங்கள்
நடராசர், துவாரபாலகர், சித்தி விநாயகர், தட்சணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி, பைரவர், சூரியன் சந்திரன், ஸ்ரீதேவி பூதேவியுடன் விஷ்ணு, மாவீரர் உதயபெருமாள், ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன.
தல வரலாறு / கதைகள்
பல காலம் முன்பு சைவக் குரவர்கள் மற்றும் சமணர்களுக்கு இடையே நடந்த அனல்வாதம் மற்றும் புனல் வாதத்தின் போது, திருஞானசம்பந்தர் வைகை ஆற்றில் மிதக்க விட்ட ஏடுகள் ஆற்றின் எதிர்த் திசையில் சென்று திருவேடகம் (ஏடகம்) என்ற இடத்தை அடைந்தன. சமணர்களின் ஏடுகள் ஆற்றின் போக்கில் அடித்துச் செல்லப்பட்டுக் கரையொதுங்கிய இடம் 'பாச்சேத்தி' / ' திருப்பாச்சேத்தி' என்று அழைக்கப்பட்டதாக இவ்வூரின் தலபுராணம் தெரிவிக்கிறது. முற்காலத்தில் இவ்வூருக்குத் திருப்பார்சோற்றி மற்றும் சதாசிவ தேவராயபுரம் என்ற பெயர்களும் இருந்துள்ளன. இக்கோயிலின் முதன்மைச் சந்நிதி நளச்சக்கரவர்த்தியால் கட்டப்பட்டதாக இப்பகுதி மக்களால் கருதப்படுகிறது. மகாலட்சுமி இத்தலத்தில் துளசியைக் கொண்டு வழிபட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவனுக்குத் துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
கோயில் அமைப்பு
இங்குக் கருவறை, அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டப அமைப்பு காணப்படுகிறது. கருவறையின் மேல் மூன்று அடுக்கு விமானம் காணப்படுகிறது. இது சுதைச் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கருவறைப்பகுதி பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. பிற பகுதிகள் நாயக்கர் காலம் மற்றும் அண்மைக்காலக் கட்டடமாக உள்ளன.
சுருக்கம்
இக்கோயிலின் மூலவராகத் திருநோக்கிய அழகியநாதர் உள்ளார். இக்கோயில் இறைவி மருநோக்கும் பூங்குழலி என்றழைக்கப்படுகிறார். இக்கோயிலின் முதன்மைக் கருவறையில் திருநோக்கிய அழகிய நாதர் சிறிய லிங்கம் வடிவில் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளார். கருவறையின் நுழைவாயிலில் இரண்டு துவாரபாலகர் உருவங்கள் காணப்படுகின்றன. சித்தி விநாயகரின் உருவம் அர்த்தமண்டபத்தின் வெளிப்புறத் தென்பகுதியில் ஒரு சிறிய கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மகா மண்டபத்தின் வடகிழக்குப் பகுதியில் நடராசரின் சுதைச் சிற்பம் காணப்படுகிறது. முன் மண்டபத்தின் வடகிழக்குப் பகுதியில் அன்னை பூங்குழலிக்குத் தனிச் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் உள்ள தேவகோட்டங்களில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை மற்றும் பிரம்மா ஆகியோரின் சிலைகள் காணப்படுகின்றன. முதல் திருச்சுற்றில் விநாயகர், வள்ளி மற்றும் தெய்வானையுடன் முருகர், சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி, பைரவர், சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோருக்குச் சிறிய சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திருச்சுற்றின் வடமேற்குப் பகுதியில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் விஷ்ணுவுக்குத் தனிச் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.
தகவல்
முனைவர் முனீஸ்வரன்
குறிப்புகள்
சிவகங்கை மாவட்டம் தொல்லியல் கையேடு பக்கம் - 87, video recording, https://temple.dinamalar.com/new.php?id=763
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
புஷ்பவனேஸ்வரர் கோயில், திருப்புவனம்.
செல்லும் வழி
மதுரையில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
மதுரை
மீடியா கோப்புகள் இல்லை
No media Files