Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

சொர்ணகாளீஸ்வரர்/ காளையார் கோயில்

Swarnakaleeswarar/Kalaiyar Temple

கோயிலின் வேறு பெயர்

சோமேஸ்வரர் கோயில், சோமநாதர் கோயில்.


பிற தெய்வத்தின் பெயர்கள்

சொர்ணகாளீஸ்வரர், சோமேஸ்வரர் , சுந்தரேசர் , சொர்ணவல்லி, சவுந்தரவல்லி, மீனாட்சி


அமைவிடம்

மதுரையிலிருந்து தொண்டி செல்லும் வழியில் உள்ளது.


ஊர்

காளையார்கோவில்

மாவட்டம்

சிவகங்கை

தலத்தின் சிறப்பு
காளையார் கோயில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், சேரமான் பெருமாள், கல்லாடர் ஆகியோரால் பாடப்பெற்றது. இங்குள்ள ஈசன் மீது சுந்தரர் பாடிய பத்து பாட்டிலும் கானப் பேர் உறைகாளை என்று இறைவனைக் குறிப்பிடுகிறார்
மூலவர் பெயர்
சொர்ணகாளீஸ்வரர்
தல மரம்
கொக்கு மந்தாரை
கோயில் குளம்/ஆறு
கஜபுஷ்கரணி (யானைமடு), சிவகங்கைக்காளி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கௌவுரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம் ஆகியவை காளையார்கோயில் பகுதியில் உள்ள குளங்களாகும்.
திருவிழாக்கள் விவரங்கள்

வைகாசி விசாகத் திருவிழா, ஆடிப்பூரத் தேர் திருவிழா மற்றும் தைப்பூசம் ஆகியவை முக்கியமான திருவிழாக்கள் ஆகும்.

கல்வெட்டு / செப்பேடு

இங்குள்ள இறைவன் கானப்பேருடைய நாயனார் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார். பொது ஆண்டு 16-ஆம் நூற்றாண்டிலிருந்து கானப்பேருடைய நாயனார், காளையார் சோமநாதர் என்றும் அழைக்கப் பெற்றிருக்கிறார். இவ்வூர் கல்வெட்டு ஒன்றில் ஆளுடையான் பெருங்கருணையாளன் என்பவன் சுந்தரபாண்டியனது 10-ஆவது ஆண்டில் திருக்கானப்பேர் இறைவனுக்குத் தன் பேரால் ஒரு வழிபாட்டை ஏற்படுத்தினான். இவ்வழிபாட்டைச் செய்வதற்காக, சோலை ஏரி ஏம்பல் என்ற பகுதியைத் தானமாகத் தந்தான். அப்பகுதிக்கான வரிவகைகளையும் நீக்கி இறையிலியாகவும் செய்தான். இந்நிலங்கள் வரியில்லாது கோயிலுக்கு கொடுக்கப்பட்டதால், வரி வசூலிக்கும் உரிமை பெற்றிருந்த காராளர்கள் கோயிலுக்குப் ’பற்று முறி’ எழுதிக் கொடுத்தனர். (பணத்தைப் பற்றிக்கொண்டு எழுதிக் கொடுத்ததால் பற்று முறி எனப் பெயர் பெறலாயிற்று.) இக்கோயிலில் பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகளும், வானாதிராயர் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இங்குள்ள கல்வெட்டுகளில் இவ்வூரில் இருந்த பிடாரி அம்மன், அய்யனார் போன்ற தெய்வங்கள் குறிப்பிடப்படுகின்றன. மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் இவ்வூரில் இருந்த தேவரடியார் நக்கன் செய்யான் காலிங்கராய தலைக்கோலி என்ற பெண் இவ்வூர் குளங்களைத் திருத்தி பல நிலங்களை வேளாண்மைக்குக் கொண்டு வந்ததை கல்வெட்டு ஒன்று தெரிவிக்கின்றது. தலைக்கோலியைப் பாராட்டி மாறவர்மன் குலசேகர பாண்டியன் பல நிலக் கொடைகள் வழங்கியதையும் காளையார் கோயில் கல்வெட்டு ஒன்று குறிப்பிடப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுகளில் பாண்டியர் காலத்தில் வழங்கிய பல வரிகள் பற்றியும், இப்பகுதியில் இருந்த பலவகையான மரங்கள் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. மேலும் வேளாண்மை பற்றிய பல செய்திகளை இங்குள்ள கல்வெட்டுகள் தருகின்றன. இப்பகுதியில் உள்ள நிலங்களை அளப்பதற்கு 13-ஆம் நூற்றாண்டில் "சுந்தரபாண்டியன் கோல்" என்ற அளவுகோல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொது ஆண்டு 13-ஆம் நூற்றாண்டில் பணியாற்றிய பாண்டிய அரசு அலுவலர்களின் பெயர்கள் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இங்குள்ள கல்வெட்டுகளில் இரண்டு கல்வெட்டுகள் முகம்மதிய காலத்தில் ஏற்பட்ட அழிவைப் பற்றி தெரிவிக்கிறது. பொது ஆண்டு 1511-இல் இடிந்து கிடந்த இக்கோயில் மடப்பள்ளியைத் நன்மபாலன் என்பவர் எடுத்துக் கட்டியதைக் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது.

சிற்பங்கள்
சூரியன், தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், விநாயகர், சுகந்தவனப்பெருமாள், விசுவநாதர்,லிங்கோத்பவர், வீரபத்திரர், சப்தமாதர், கெஜலட்சுமி, சுப்பிரமணியர், பிரம்மா, நடராஜர், சண்டீஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், சந்திரன் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.
கோயில் அமைப்பு

சோமேசர் கோயிலின் தெற்கு ராஜகோபுரம் 18ஆம் நூற்றாண்டில் மருது சகோதரர்களால் கட்டப்பட்டது.  இதன் உயரம் 155.5 அடி, அகலம் 93 அடி. இங்கு மருதிருவர் காலத்தில், கோயிலின் தென்புறம் "யானைமடு" எனப்படும் திருக்குளம் உருவாக்கப் பெற்றது.

சுருக்கம்

இத்திருக்கோயிலில் மூன்று சதாசிவ மூர்த்தங்கள் தனித்தனிச் சந்நிதிகளைக் கொண்டுள்ளனர். அவை சொர்ணகாளீஸ்வரர், சோமேசர்/சோமேஸ்வரர் மற்றும் சுந்தரேசர் என்பனவாகும். அவற்றுள் சோமேஸ்வரர் பெரிய தோற்றத்தோடு திகழ்கிறார். இத்திருக்கோயில் சுமார் 155 அடி உயரமுள்ள ஒரு கம்பீரமான ராஜகோபுரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது ஆனை மடு என்ற, மண்டபத்துடன் கூடிய, ஒரு பெரிய தெப்பக் குளத்துடன் அமைந்துள்ளது.

கூடுதல் விவரங்கள்

முற்காலப் பாண்டிய மன்னர்களும், பிற்காலப் பாண்டிய அரசர்களும், மருது பாண்டியரும் இக்கோவிலை மாபெரும் கோவிலாக உருவாக்கி இருக்கின்றனர். இம்மாவட்டத்தில் அமைந்த பெருங்கோவிலுள் இதுவும் ஒன்றாகும். ராஜகோபுரம் வழியாக உள்நுழையும் போது முதலில் ஶ்ரீசோமேஸ்வரர் அருள் பாலிக்கிறார். சோமேசர் சந்நிதிக்கு இடப் பக்கத்தில் இந்திரனால் பூசிக்கப்பட்ட ஒரு பிரம்மாண்ட சகஸ்ரலிங்கம் (ஒரே லிங்கத்தில் 1000 லிங்கங்கள்) அமைந்துள்ளது. சோமேசர் சந்நிதிக்கு வலப் பக்கம் சௌந்தரநாயகி அம்மன் சந்நிதி அமைந்துள்ளது. கருவறை மண்டபத் திருச்சுவரினை இச்சா சக்தி, ஞான சக்தி மற்றும் கிரியா சக்திகள் அலங்கரிக்கிறார்கள்.

காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 9-ஆம் நூற்றாண்டில் வீரசேனபாண்டிய மன்னரால் இக்கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
தல வரலாறு / கதைகள்

காளையார் கோயில் என்று அழைக்கப்படும் இவ்வூர், சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு, சங்க காலத்தில் இருந்தே வரலாற்றுச் சிறப்புடன் விளங்குகிறது. வேங்கை மார்பன் என்ற சிற்றரசன் இப்பகுதியில் ஒரு வலிமையான கோட்டையை கட்டினார். கோட்டை மதில்களைச் சுற்றி அகழிகள் வெட்டப்பட்டிருந்த செய்தியை புறப்பாடலில் ஐயூர் முலங்கிழார் புகழ்ந்து பாடியுள்ளார். இவ்விடத்தில் வலிமையான கோட்டையும் காட்டரணும் சிறப்பாக அமைந்திருந்ததால் சங்க இலக்கியங்கள் இவ்வூரைக் 'காணப் பேரேயில்' என்று குறிப்பிடுகின்றன. இக்கோட்டையை உக்கிரப்பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் கைப்பற்றியதால், ’கானப்பெரயில் கடந்த உக்கிரப்பெருவழுதி’ என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான். இந்த சிவன் கோயிலில் உள்ள ஈசன் மீது சுந்தரர் பாடிய பத்து பாட்டிலும் "கானப் பேர் உறைகாளை” என்று இறைவனைக் குறிப்பிடுகிறார். அத்திருவாக்கின் சீர்மையால் காளையார் என்னும் பெயர் அவருக்கு அமைந்தது. காளையார் அமர்ந்தருளும் கோயில் காளையார் கோயிலாயிற்று. கோயிற் பெயரே நாளடைவில் ஊர் பெயராயிற்று. சோமநாதர் என்ற பெயர் இவ்விறைவனுக்கு ஏற்பட்டமைக்குக் காரணம் இவ்வூரில் பாண்டியர் காலத்தில் சிறப்புடன் வாழ்ந்த சோமநாதன் என்ற துறவியின் ஏராளமான திருப்பணிக் கொடைகளே ஆகும். இக்கோயிலுக்குப் பல தானங்களை அளித்ததோடு மட்டுமல்லாமல் அம்மன் கோயிலையும் கட்டி அத்தேவி திருவீதி எழுந்தருள திருவீதி நாச்சியார் என்ற செப்புத் திருமேனியும் செய்து அளித்துள்ளார். இத்துறவி பாண்டிய அரசரது குருவாகவும் விளங்கியிருக்கிறார். இதற்கு குரு தட்சணையாக இப்பகுதியில் வேலங்குளம் என்ற ஊரை தானமாக பெற்றுள்ளார். இதன் பிறகு இவ்வூர் சோமநாத நல்லூர் என்ற பெயர் பெற்றது. இவ்வூரையே சிறிது காலத்தில் கானப்பேருடைய நாயனாருக்கு இத்துறவி தானமாக அளித்துள்ளார். வைணவர்கள் இவ்வூரை 'அஞ்சினான் புகழிடம்' என்றும் அழைப்பர். இக்கோயிலில் யானை மடு என்றழைக்கப்படும் பெரிய தெப்பக் குளம் இந்திரனின் யானையான ஐராவதத்தால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இலங்கை மன்னன் ராவணனைக் கொன்ற தோஷத்திலிருந்து விடுபட ராமர் இங்கு குளித்ததற்கான சான்றுகள் ஸ்கந்த புராணத்தில் கிடைப்பதாகக் கூறப்படுகிறது .

தகவல்

க.த.காந்திராஜன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்

மருது சகோதரர்கள் தம் தாயாரின் நினைவாக இவ்வூரின் கிழக்கில் "ஆத்தா ஊருணி" என்று பெயர் பெற்ற ஊருணியை வெட்டுவித்தனர். இக்கோயிலின் எதிரில் மருது பாண்டியர் சமாதி உள்ளது.

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்

சிவகங்கை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை மற்றும் திருச்சி

மீடியா கோப்புகள் இல்லை

No media Files