பிரான்மலை சிவன் கோயில்
Pranmalai Shiva Temple
தலத்தின் சிறப்பு
மூலவர் பெயர்
தல மரம்
கோயில் குளம்/ஆறு
ஆகமம்
திருவிழாக்கள் விவரங்கள்
சித்திரையில் பிரம்மோத்சவம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சிவராத்திரி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
கருத்து வேறுபாடுகள் உள்ள தம்பதியர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் ஒற்றுமை உண்டாகும் என்பது நம்பிக்கை. சாதகத்தில் சுக்கிரன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் இங்குப் பார்வதி இடம் வேண்டிக் கொள்கின்றனர். மேலும் சிவன் மற்றும் பார்வதிக்கு வெண்ணிற ஆடை (வஸ்திரம்) அணிவித்து சிறப்புப் பூசைகள் செய்து நேர்த்திக் கடனை நிறைவேற்றுகின்றனர்.
கல்வெட்டு / செப்பேடு
பிரான்மலையின் முக்கியத்துவம், இங்கு உள்ள கல்வெட்டுகளால் உறுதிப்படுத்தப்படுகிறது. இங்கு மன்னர் வீரபாண்டியன் (பொ.ஆ. 946-966), குலசேகரப் பாண்டியன் (பொ.ஆ. 1268-1308), சுந்தரபாண்டியன் மாறவர்மன் (பொ.ஆ. 1216-1235), சிம்மநரசிம்மராயர் (பொ.ஆ. 1499-1500) ஆகியோரின் கல்வெட்டுகள் உள்ளன. இவை பிரான்மலையின் அரசியல் வரலாற்றைத் தெரியப்படுத்துகின்றன. இக்கோயிலில் ’திருநாவுக்கரசு நாழி’ என்ற ஒரு பாரம்பரிய அளவுக் கருவியைப் பயன்படுத்தி அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் அளக்கப்பட்டன என்று பொ.ஆ. 1723-ஐச் சேர்ந்த கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பழங்காலப் பாண்டிய அரசின் பொருளாதாரச் செயல்பாடுகளையும், இறை ரீதியான தொடர்புகளையும் பிரதிபலிக்கின்றது. இங்குள்ள பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகள், இறைவனுக்கும் கோயிலுக்கும் வழங்கப்பட்ட தானங்களை விரிவாக விவரிக்கின்றன. மன்னன் ஜடாவர்ம சுந்தரபாண்டியன், இக்கோயிலுக்குப் பல நிலங்களைத் தானமாக அளித்துத் தமது பக்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், ’ஆலவாய் உடைய நாயனார்’, ’அம்பலப் பெருமாள்’ என்ற பெயரில் பிரான்மலையில் உள்ள பல சிற்றாலயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பிரான்மலையில், நாயக்கர் காலத்தில் அறுபத்து மூவர் திருமடம் என்ற சைவ மடம் இருந்தது குறிப்பிடத்தக்கது. மதுரை நாயக்க மன்னர்கள், குறிப்பாக விஜயரங்க சொக்கநாத நாயக்கர், இக்கோயிலுக்குப் பல தானங்களை அளித்துள்ளார் என்பதைக் கல்வெட்டுச் சான்றுகள் உறுதிசெய்கின்றன. பிரான்மலையில் உள்ள சுப்பிரமணியர் கோயிலின் கோபுரம் பொ.ஆ. 13ஆம் நூற்றாண்டில் புவனேக வீரன் என்பவர் கட்டியதாகக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. எனவே, இக்கோயிலின் கோபுரம் ’புவனேக வீரன் திருவாசல்’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. மேலும், இவ்வூர் பண்டைய வணிகப்பாதையில் அமைந்திருந்தமையால், வணிகர்கள் இக்கோயிலில் தங்கி, தங்கள் கூட்டங்களை நடத்தியிருக்கின்றனர். மேலும், இப்பாதையில் எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகளைப் பற்றிய கல்வெட்டுகள், தமிழ்நாட்டு வணிகர் வரலாற்றின் முக்கியப் பகுதிகளை வெளிக்கொணர்கின்றன.
கோயில் அமைப்பு
பிரான்மலைக் கோயில் மூன்று அடுக்குகளாக உள்ளது. மூன்றிலும் சிவ பெருமானே முதன்மைக் கடவுளாக உள்ளார். இங்கு மூன்றாவது அடுக்கு மட்டும் பொது ஆண்டு 8ஆம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தில் குடைவரைக் கோவிலாகக் கட்டப்பட்டுள்ளது. இக்குடைவரைக் கோயிலின் முன்பு, பிற்காலப் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட மண்டபங்களும் பரிவார ஆலயங்களும் காணப்படுகின்றன. தொடர்ச்சியாக 18 ம் நூற்றாண்டு வரை இக்கோயில் வளாகம் விரிவாக்கம் செய்யப்பட்டு வந்துள்ளது.
சுருக்கம்
பிரான்மலையிலுள்ள கொடுங்குன்ற நாதர் ஆலயம் மலை அடிவாரம், மலையின் நடுப்பகுதி, மலை உச்சி ஆகிய மூன்று நிலைகளிலும் சந்நிதிகள் கொண்டு காணப்படுகிறது. இம்மலையில் சிவன் பாதாளம், பூலோகம், கைலாயம் என மூன்று அடுக்குகளில் இருந்து காட்சி தருகிறார். பாதாளத்திலுள்ள கோயிலில் சிவன், “கொடுங்குன்றநாதர்” என்ற பெயரில் அருளுகிறார். இவருடன் அம்பிகை “குயிலமுதநாயகி” தனிச்சந்நிதியில் இருக்கிறார். நடுவிலுள்ள கோயிலில் “விசாலாட்சியுடன் விஸ்வநாதர்,” கோலத்தில் அம்மையும் அப்பனும் காட்சி அளிக்கின்றனர். மலை உச்சியில் மங்கைபாகர் என்னும் பெயரில் ஈசன் திருமணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். மங்கைபாகருக்கு உமாமகேஸ்வரர் என்றும் ஒரு பெயருண்டு. இறைவி தேனாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார்.
கூடுதல் விவரங்கள்
மேலடுக்கிலுள்ள பாண்டியர் காலக் குடைவரையின் முன்மண்டப மேற்சுவரில் கைலாயத்தில் சிவ,பார்வதி திருமணம் காணச்சென்ற முப்பத்து முக்கோடி தேவர்களும் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது. இத்தலத்தில் தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் (ஐப்பசி முதல் பங்குனி வரையில்), சிவன் மீது சூரிய ஒளி விழுவதாகச் சொல்லப்படுகிறது. பிரான்மலை, தமிழ் நாட்டின் மிக முக்கியமான வரலாற்று மற்றும் பண்பாட்டுத் தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. இது, பாண்டிய நாடு மற்றும் சோழ நாட்டுக்கு இடையே செல்லும் பண்டைய பெருவழியில் அமைந்திருந்ததால், அரசியல் மற்றும் வணிக முக்கியத்துவம் பெற்றிருந்தது. இவ்வூரில் கிடைத்த கல்வெட்டுகளில் இப்பகுதி ’திருக்கொடுங்குன்றம்’ எனக் குறிப்பிடப்படுகிறது. இவ்வூர், கடையெழு வள்ளல்களில் ஒருவராக விளங்கிய பாரி மன்னன் வாழ்ந்த தலமாகக் கருதப்படுகிறது. இதுவே இத்தலத்தின் தொன்மையை எடுத்துக்காட்டுகிறது. இங்கு அருவியூர் மயிலேறும் பெருமாள் என்பவர், இளைய பிள்ளையாரது செப்புத் திருமேனியை உருவாக்கி அதனை அவரது தேவியரோடு பிரதிஷ்டை செய்துள்ளது இவ்விடத்தின் சிறப்பாகும். இக்கோயிலின் கலைநயம் மிக்க கதவுகள், திருவாசி விளக்குகள், மற்றும் நேர்த்தியான சிற்பங்கள், இதன் தொன்மையையும் பண்பாட்டையும் பறைசாற்றுகின்றன. இக்கோயிலில் பழங்காலத்தில் ஆடற்கலையும், பாடற்கலையும் சிறப்பாக இருந்துள்ளது. பல தேவரடியார்கள் இவ்வூரில் வாழ்ந்து வந்ததுள்ளனர். பிரான்மலை, பாண்டியர் மற்றும் சோழர்களின் அரசியல் மற்றும் வணிக வளங்களைப் பிரதிபலிக்கும் ஒரு முக்கியத் தலமாகும். இதன் தொன்மையும், கல்வெட்டுச் சான்றுகளும், வணிகத் தொடர்புகளும், கலைச் சிறப்புகளும் இதன் பெருமையை உயர்த்துகின்றன.
காலம்/ ஆட்சியர்
தல வரலாறு / கதைகள்
திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டுத் தலங்களைத் தரிசிக்க வேதாரண்யத்தில் இருந்து புறப்படும் முன், பிரான்மலையைக் கண்டபோது அது சிவலிங்கமாக அவருக்குக் காட்சி அளித்தது. இதனால், அவர் அந்த மலையை ’எம்பிரான் மலை’ (சிவபெருமான் மலை) என்று அழைத்தார். இன்று காலப்போக்கில் எம்பிரான் மலை மருவிப் ’பிரான்மலை' ஆகிவிட்டது என்று செவிவழிச் செய்தி உள்ளது. இக்கோயிலுக்கு இரண்டு தல வரலாறுகள் செல்லப்படுகின்றன. கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், முனிவர்கள் என அனைவரும் கைலாயம் சென்றனர். இதனால் வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. உலகைச் சமப்படுத்த சிவன், அகத்தியரைத் தென்திசையில் பொதிகை மலைக்குச் செல்லும்படி கூறினார். அகத்தியருக்கோ, சிவனின் திருமணத்தைக் காண வேண்டுமென்ற ஆசை இருந்தது. தனது எண்ணத்தைச் சிவனிடம் முறையிட்டார். தென்திசையில் அவருக்குத் தனது திருமணக்காட்சி கிடைக்கும் என்றார் சிவன். அப்போது அகத்தியர் சிவனிடம், தான் விரும்பும் இடங்களில் எல்லாம் அவரது திருமணக்கோலக் காட்சி கிடைக்க வேண்டும் என வேண்டினார். அதன்படி அகத்தியர் பொதிகை மலைக்குச் செல்லும் வழியில், பல இடங்களில் சிவனின் திருமணக்கோலத்தைத் தரிசித்தார். அவ்வாறு அவர் தரிசித்த தலங்களில் இத்தலமும் ஒன்று என்கின்றனர். மேலும், ஒருசமயம் வாயுபகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் தங்களில் யார் பலசாலி எனப் போட்டி எழுந்தது. ஆதிசேஷன் மேரு மலையைச் சுற்றிக்கொள்ள வேண்டும்; அதை வாயு பகவான் தனது பலத்தால் பெயர்க்க வேண்டும் என்பதே போட்டி. ஆதிசேஷன், தன் பலத்தால் மலையை இறுகப் பற்றிக்கொண்டார். வாயு பகவான் எவ்வளவோ முயன்றும், மலையை அசைக்க முடியவில்லை. இந்தப் போட்டியின்போது, மேரு மலையிலிருந்து துண்டுகள் பெயர்ந்து விழுந்தன. அவ்வாறு விழுந்த பகுதியே, இங்கு மலையாக உள்ளது என்கின்றனர். இதுவே இரண்டாவது தல வரலாறு ஆகும்.
தகவல்
க.த.காந்திராஜன்
குறிப்புகள்
சிவகங்கை மாவட்டம் தொல்லியல் கையேடு பக்கம் - 33 https://temple.dinamalar.com/new.php?id=392 https://balasjourney.com/varalatraithedi/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
மலையின் உச்சியில் ஒரு முருகன் கோவிலும் அதற்கு அருகில் ஒரு இஸ்லாமியத் தர்க்காவும் உள்ளன. அதற்கு ஓர் அடுக்குக் கீழே ஒரு சித்தரின் சமாதியும் உள்ளது.
மீடியா கோப்புகள் இல்லை
No media Files