Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

ஸ்ரீ கண்ணுடைய நாயகி கோயில்

Kannudaya Nayaki Temple

கோயிலின் வேறு பெயர்

கண்ணாத்தாள் கோயில்


அமைவிடம்

சிவகங்கையின் நடுவில் அமைந்துள்ளது.


தலத்தின் சிறப்பு

கண்ணுடைய நாயகி அம்மன் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்குக் கண்பார்வை வரத்தைக் கொடுக்கும் சக்தி வாய்ந்த தெய்வமாகப் பலராலும் கருதப்படுகிறார்.


ஊர்

நாட்டரசன்கோட்டை

மாவட்டம்

சிவகங்கை

மூலவர் பெயர்
கண்ணுடைய நாயகி
பூசைக்காலம்

நாள்தோறும் விளா பூசை, சாந்தி பூசை, உச்சிக்காலப் பூசை, சாயரக்ஷை பூசை, அர்த்தசாம பூசை ஆகியவை நடைபெறுகின்றன.

திருவிழாக்கள் விவரங்கள்

கண்ணாத்தாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத் திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. இதைத் தவிர ஐப்பசியில் கோலாட்டத் திருவிழா, தை மாதத்தில் தைலக்காப்பு உற்சவம், ஆடி மாதத்தில் முளைக்கொட்டுத் திருவிழா, நவராத்திரி விழா, செவ்வாய்த் திருவிழா மற்றும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் களியாட்டத் திருவிழா ஆகியவை கொண்டாடப்படுகின்றன.

வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்

கண் பார்வைக் குறைபாடு உடையவர்கள், நாற்பத்தெட்டு நாட்கள் விரதமிருந்து அம்மனை நாள்தோறும் வழிபட்டு, அம்மனின் அபிசேகத் தீர்த்தத்தைக் கண்களில் விட்டால் கண் பார்வைக் குறைபாடு நீங்கும் என்பது நம்பிக்கை. முளை கொட்டுத் திருவிழாவின் போது ஒன்பது வெள்ளி ஓடுகளிலும் ஒரு தங்க ஓட்டிலும் முளைப்பாரி போடப்படுகிறது. மக்கட்பேறு இல்லாதவர்கள் அம்மனிடம் கரும்புத் தொட்டில் எடுப்பதாக வேண்டிக் கொள்கின்றனர். குழந்தைப் பாக்கியம் கிடைத்ததும் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.

கோயில் அமைப்பு

கோயிலின் முன்பகுதியில் பிரதானக் கருவறை, அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டப அமைப்புகள் காணப்படுகின்றன. கோயில் வளாகத்தில் சிற்ப வேலைப்பாடு மிக்க உயரமான ராஜகோபுரம், அலங்கார மண்டபம், கர்ணக்கால் மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. கோயிலுக்கு எதிரே அழகிய தெப்பக்குளமும் அமைந்துள்ளது.

சுருக்கம்

கண்ணாத்தாள் என்று அழைக்கப்படும் கண்ணுடைய நாயகி அம்மன் பார்வையற்றவர்களுக்கும், பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கும் கண்பார்வை வரத்தைக் கொடுக்கும் சக்தி வாய்ந்த தெய்வமாகப் பலராலும் கருதப்படுகிறார். இக்கோயிலில் அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இக்கோயில் கருவறையில் அன்னை கண்ணாத்தாள் சற்றே தலை சாய்த்து, சிலம்பணிந்த பாதத்தின் கீழ் அரக்கனை மிதித்தபடியும், மற்றொரு காலை மடித்து உயர்த்தியபடியும் காட்சி தருகிறார். அம்மன், தன் எட்டுக் கரங்களில் கபாலம், அக்னி, சூலம், உடுக்கை, குறுவாள், கிளி, கேடயம், மணி ஆகியவற்றை ஏந்தியுள்ளார்.

கூடுதல் விவரங்கள்

இவ்வூரில் உள்ள கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் கொடிக்கம்பம் முதலிய திருப்பணிகள் சேதுபதிகளால் செய்யப்பட்டன என முத்து நாயகப் புலவர் பாடிய "கண்ணுடைய அம்மைப் பள்ளு" என்னும் நூலில் வரும் "கனக விசய ரகுநாத சேதுபதி செய்த கொடி கம்ப மண்டபம் புகழக் கூவாய் குயிலே'' என்ற பாடல் மூலம் அறியலாம். உற்சவ மூர்த்தியான களியாட்டக் கண்ணுடைய நாயகி சிவகங்கை தேவஸ்தானப் பதிவேட்டில் சாமுண்டீஸ்வரி எனக் குறிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. களியாட்ட நாயகியாக அலங்கரிக்கப்பட்ட அம்மன் எட்டுக் கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் வெள்ளி ரதத்தில் வீதி உலா வருகிறார். பங்குனியில் ஆண்டுதோறும் கண்ணுடைய நாயகி அம்மன் வெள்ளிரதத் திருவிழா தொடங்குவதற்கு முன்னர் "சேங்கை வெட்டு" என்னும் பெயரில் கோயில் திருக்குளத்தில் மக்கள் தாமாகவே தூர் எடுக்கும் விழா, இன்றளவும் நடந்து வருகிறது. திருக்கார்த்திகை நாளில் அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளுகிறார். அன்று சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.

காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 18ஆம் நூற்றாண்டாகக் கருதப்படுகிறது.
தல வரலாறு / கதைகள்

நாட்டரசன் கோட்டைக்குத் தெற்கில் பிரண்டைக்குளம், அல்லூர், பனங்காடி போன்ற ஊர்களில் உள்ள பால் வணிகர்கள் நாள்தோறும் பால், மோர், தயிர் ஆகியவற்றை விற்பதற்காக நாட்டரசன் கோட்டைக்கு எடுத்து வரும்பொழுது ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள கல்லில் தடுக்கிப் பால் கீழே விழுந்து விடுமாம். இந்தப் பிரச்சனையைச் சிவகங்கை மன்னரிடம் கொண்டு செல்ல அவர்கள் முடிவெடுத்தனர். அதே சமயம் அம்மன் சிவகங்கை மன்னரின் கனவில் தோன்றிப் பலா மரத்தின் அருகில் தான் பூமிக்குள் புதைந்து கிடப்பதாகவும் தன்னைத் தோண்டி எடுத்து வழிபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதேபோல் மறுநாள் மன்னரும் மக்கள் அனைவரும் அவ்விடத்திற்குச் சென்று கல்லைத் தோண்டி வெளியே எடுத்தனர். அம்மன் உருவத்தில் அந்தக் கல் வெளிப்படத் தொடங்கியது. அப்பொழுது பள்ளம் தோண்டுபவரின் கடப்பாரையின் நுனி அவர் கண்ணில் பட்டு இரத்தம் வடியத் தொடங்கியது. அதைப் பொருட்படுத்தாமல் பணியைத் தொடர்ந்து செய்தார். அம்மனின் சிலை முழுமையாக வெளிவந்த அடுத்த நொடியே பாதிக்கப்பட்டவரின் கண் சரியானது. கண்பார்வையை மீட்டுக் கொடுத்ததால் அவ்வம்மனுக்குக் கண்ணாத்தாள் என்று பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது. பல காலமாக இத்தலத்தில் கண்ணுடைய நாயகி அம்மன் எழுந்தருளி வருகிறார். ஆனால் அவருக்கான கோயில் 18ஆம் நூற்றாண்டில் நகரத்தார் சமூகத்தினால் கட்டப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. நாட்டரசன் கோட்டை "வடகளவழி நாட்டு நாட்டரசன் கோட்டை" என்று கண்ணுடையம்மன் பள்ளுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டிய நாட்டில் பொது ஆண்டு 900-க்கு முன்பு நிலவிய முற்காலப் பாண்டியர் காலத்தில் உருவான நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இதுவும் ஒன்றாகும். இந்தக் ’களவழிநாடு’ என்பதே கண்ணுடையம்மன் போன்ற பிற்கால இலக்கியங்களில் 'கலை வேள்வி நாடு' என்று குறிப்பிட்டுள்ளது. இம்மாற்றம் பொது ஆண்டு 18ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டதாகும்.

தகவல்

க.த.காந்திராஜன்

குறிப்புகள்

சிவகங்கை மாவட்டம் தொல்லியல் கையேடு பக்கம் - 9 https://temple.dinamalar.com/en/new_en.php?id=1025 https://www.alayathuligal.com/blog/6hmy2cxxwkrw5ttxg6ncpdt96baj8m

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்

சிவகங்கை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

தங்கும் வசதி
காரைக்குடி

மீடியா கோப்புகள் இல்லை

No media Files