அருள்மிகு கூடலழகர் திருக்கோயில்
Koodalazhagar Temple
கோயிலின் வேறு பெயர்
திருமால் திருக்கோயில்
பிற தெய்வத்தின் பெயர்கள்
வியூக சுந்தரராஜன் ஆகிய விஷ்ணு, மதுரவல்லித் தாயார் ஆகியோர் முக்கியத் தெய்வங்கள். சிறிய சந்நிதி தெய்வங்கள்- நவக்கிரக சந்நிதி, ஸ்ரீ கிருஷ்ணன், ஸ்ரீ ராமன், இலட்சுமி நரசிம்மர், இலட்சுமி நாராயணர் மற்றும் 12 ஆழ்வார்கள் ஆகியோர் ஆவர்.
அமைவிடம்
கூடலழகர் பெருமாள் கோயில் தெரு, பள்ளிவாசல் சாலை.
ஊர்
பெரியார் நிலையம்
மாவட்டம்
மதுரை
தலத்தின் சிறப்பு
அருள்மிகு கூடலழகர் திருக்கோயில் வைணவத் திவ்ய தேசங்கள் 108இல் 47ஆவது திவ்ய தேசம் ஆகும். இக்கோயிலைப் பற்றி நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் ஆழ்வார்களால் பாடப்பெற்றுள்ளது. திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் மற்றும் திருமழிசையாழ்வார் ஆகியோர் இக்கோயிலில் சிற்பங்களாகச் செய்து வைக்கப்பட்டுள்ளனர். இக்கோயில் மங்களா சாசனம் பெற்ற திருத்தலமாகும். அருள்மிகு மதுரவல்லித் தாயார் சந்நிதியின் முன்மண்டபத்தில் கருங்கல்லாலான இசைத்தூண்கள் அமைந்துள்ளன.
மூலவர் பெயர்
கூடலழகர்
தல மரம்
கதலி
கோயில் குளம்/ஆறு
பெருமாள் தெப்பக்குளம் ஹேமபுஷ்கரணி.
ஆகமம்
வைகானசம் ஆகமம்
திருவிழாக்கள் விவரங்கள்
வைகுண்ட ஏகாதசி மார்கழி மாதத்தில் நடைபெறும். பிரமோற்சவம் பங்குனி மற்றும் சித்திரை மாதத்தில் நடைபெறும். சித்திரைத் திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறும். பவித்ரோத்ஸவம் ஆவணி மற்றும் புரட்டாசி மாதங்களில் நடைபெறும். ஆடிப் பூரம் ஆடி மாதத்தில் நடைபெறும். நவராத்திரி விழா புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதங்களில் நடைபெறும்.
வைகாசி மாதம் இக்கோயிலில் பெருவிழா கொண்டாடப்படுகிறது. அனுச நட்சத்திரத்தன்று தேரோட்டம் நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் பௌர்ணமியன்று இந்தக் கோயிலில் நடைபெறும் ஐந்து கருடசேவை மிகவும் புகழ்பெற்ற திருவிழா ஆகும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
நித்திய அபிஷேகம் மற்றும் பூசை, நந்தவன புஷ்பங்கள், வாசனைத் திரவியங்கள், தீபங்கள், நைவேத்திய பிரசாதம் ஆகியவற்றைக் கொண்டு வழிபாட்டுச் சடங்குகள் நடைபெறுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
திருக்கோயிலின் அஷ்டாங்க விமானத்தின் அடிப்பகுதியில் (அதிட்டானத்தில்) வடபுறம், மேல்புறம் மற்றும் தென்புறத்திலும் கல்வெட்டுகள் அமைந்துள்ளன. இவை 16ஆம் நூற்றாண்டு நாயக்கர் காலத்தைச் சேர்ந்த, தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டுகளாகும். இக்கல்வெட்டுகள் இத்திருக்கோயிலுக்குத் தானமாக வழங்கப்பட்ட நிலங்களைப் பற்றியும், திருப்பணிகள் செய்த விவரங்களைப் பற்றியும் தெரிவிக்கின்றன. கோயில் விமானத்தின் அதிட்டானப் பகுதியில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டுகள் விசயநகர மன்னர் சதாசிவராயர் (பொது ஆண்டு 1542-70) காலத்தைச் சேர்ந்தவை. இவர் காலத்தில் தென்மண்டல அதிபதியாக விளங்கிய இராமராசவிட்டல மகாதேவ ராயரின் கீழ் அதிகாரியாயிருந்த வசவணரின் மகன் திம்மப்பநாயக்கர், தனது தலைவர் இராமராசவிட்டலர்க்குப் புண்ணியமாக, கூடலழகர் கோயில் வழிபாட்டுச் செலவுகளுக்கு மதுரைப் பகுதியில் உள்ள சில ஊர்களைத் தானமளித்துள்ளார்.
சுவரோவியம்
இத்திருத்தலத்தில் மூன்று நிலைகளாக அமையப்பெற்ற அஷ்டாங்க விமானத்தின் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலையில் மூலிகைச் சுவர் ஓவியங்கள் நான்கு சுவர்களிலும் தீட்டப்பட்டுள்ளது.
இதில் இரண்டாம் நிலையிலுள்ள சூர்யநாராயணர் சந்நிதியில் அஷ்டதிக் பாலர்கள் (அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், இந்திரன்), சூர்யநாராயணர் ஸ்ரீதேவி பூமிதேவியருடன் அமர்ந்த திருக்கோலத்திலும், சிவ பெருமான், பரசுராமர், பிரம்மா, கின்னரர், சாமரம் வீசும் பெண், அரசர், சங்கு, கிருஷ்ணர், ஹனுமார், கருடன், சக்கரம், ஐந்து பஞ்சாயுதங்கள் (சங்கு, சக்கரம், கதை, வில், அம்பு, வாள்) பட்சிகள், சிவன், ஆஞ்சநேயர், கண்ணன் மற்றும் கன்னிகைகள் ஆகிய உருவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது நிலையிலுள்ள சீராப்திநாதர் சந்நிதியில் அட்டதிக் பாலர்கள், ஐந்து பஞ்சாயுதங்கள், பட்சிகள், சிவன், ஆஞ்சநேயர், கண்ணன், கன்னிகைகள் ஆகிய உருவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
சிற்பங்கள்
அஷ்டலெட்சுமி மற்றும் தசாவதாரம் போன்ற சிற்பங்கள் கோயில் மண்டபத்தில் அமைந்துள்ளன. இந்தச் சிற்பங்கள் கதை வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. சுதையால் செய்யப்பட்ட இந்தச் சிற்பங்கள் பொது ஆண்டு 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். அருள்மிகு மதுரவல்லித் தாயார் சந்நிதி சொக்கட்டான் மண்டபத்தில் உள்ள தூண்களில் அஷ்டலெட்சுமி, கிருஷ்ணன் பிறப்பு, கிருஷ்ணரை வாசுதேவர் எடுத்துச் செல்லுதல், கம்சன் எட்டாவது குழந்தையை வதம் செய்யக் காளிதேவியாக உருமாறி வானத்தை நோக்கிப் பறந்த காட்சி, பூதனை வதம், சகடாசுரன் வதம் ஆகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன.
கோயிலின் ’சுவாமி அலங்காரம் செய்யும் வாகன மண்டபத்திற்கு’ அருகில் சூர்ய ரதம் ஒன்று அமைந்துள்ளது. கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட இந்த ரதம் பொது ஆண்டு 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சூர்ய பகவானுடன் சூர்ய மண்டலத்தின் சித்தரிப்பும் கற்சிற்ப வடிவில் கலைநயத்துடன் காணப்படுகிறது.
இதைத் தவிர நாயக்கர் மன்னர்களின் சிற்பங்கள் கோயிலின் மண்டபத்தில் அமைந்துள்ளன. இந்தக் கற்சிற்பங்கள் பொது ஆண்டு 16ஆம் நூற்றாண்டு, நாயக்கர் காலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்திருக்கோயிலின் கொடிமர மண்டபத்தில் கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி உள்ள கல்தூண்களில் யாழி உருவச் சிற்பங்களும், ஹேமபுஷ்கரணி நுழைவு வாயிலில் உள்ள கல்தூண்களில் வசவப்ப நாயக்கர் மற்றும் திம்மப்ப நாயக்கர் கற்சிற்பங்களும் உள்ளன.
கோயில் அமைப்பு
இத்திருக்கோயிலில் ஐந்து கலசத்துடன் கூடிய ஐந்தடுக்கு ராஜகோபுரமும் கல்லால் ஆன சிறப்புமிக்க அட்டாங்க விமானமும் உள்ளன.கோபுரத்தின் முதல் இரண்டு தளங்களில் ராமாயணச் சிற்பங்கள் காணப்படுகின்றன. மூன்றாம் மற்றும் நான்காம் தளங்களில் கிருஷ்ண லீலையின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஐந்தாம் தளத்தில் விஷ்ணுவின் அவதாரங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு தளத்தின் நுழைவாயிலின் இருபுறமும் துவாரப்பாலர்கள் காட்டப்பட்டுள்ளனர். இக்கோயிலில் கருவறை, அந்தராலம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், கல் தூண் மண்டபம், மற்றும் திருச்சுற்று மண்டபம் ஆகியவை காணப்படுகின்றன. விமானம் மூன்று நிலைகள் மற்றும் ஐந்து அடிப்படை அங்கங்களையும் சேர்த்து எட்டு அங்கங்கள் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி எட்டுப் பிரகாரங்கள், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நவக்கிரகங்கள், ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள், மணவாள மாமுனிகள், விச்வக்சேனர், ராமர், கிருஷ்ணர், இலட்சுமி நாராயணர், கருடன், ஆஞ்சநேயர், இலட்சுமி நரசிம்மர் ஆகியோரின் சந்நிதிகளும் இக்கோயிலில் உள்ளன.
அஷ்டாங்க விமானத்தின் கீழ்தளத்தில் கூடலழகர் அமர்ந்த கோலத்திலும், இரண்டாவது தளத்தில் சூரிய நாராயணர் நின்ற கோலத்திலும் மூன்றாவது தளத்தில் பாற்கடல் நாதர் பள்ளிகொண்ட கோலத்திலும் காணப்படுகின்றனர். உற்சவராக வியூக சுந்தர்ராஜப் பெருமாள் உள்ளார்.
கூடுதல் விவரங்கள்
இக்கோயிலின் இப்போதைய கட்டுமானம் முற்றிலும் பொது ஆண்டு 15-16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக உள்ளது. இக்கோயில் விமானம் எட்டு உறுப்புகளைக் கொண்டது என்பதால் வடமொழியில் இதனை ’அஷ்டாங்க விமானம்’ எனக் கூறுவர். அதிட்டானம், பித்தி, பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி என்னும் இயல்பான ஆறு அங்கங்களுடன் இரண்டு மேல்தளங்களையும் சேர்த்து அட்டாங்க விமானம் அமையும். இவை பொதுவாகத் திருமால் கோயில்களில், திருமாலின் அமர்ந்த, நின்ற, கிடந்த கோலங்களைக் காட்டுவதற்காகவே அமைக்கப்படும். மணவாள மாமுனிகளின் திருவடித் தொண்டனான மாவலிவாணாதிராயன் ஒருவன் இக்கோயிலுக்கும், திருமாலிருஞ்சோலை, திருமோகூர் ஆகிய கோயில்களுக்கும் திருப்பணிகள் பல செய்துள்ளான். இக்கோயிலிலுள்ள இராமர், சீதை, இலக்குவன் ஆகிய செப்புத்திருமேனிகள் முற்காலப்பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவையாக (பொது ஆண்டு 10 ஆம் நூற்றாண்டு) இருப்பதைக் கொண்டும் இக்கோயில் தொன்மையானது என்பதை உறுதிப்படுத்தலாம்.
இக்கோயில் அந்நியர் படை எடுப்பின்போது அழிவுக்கு உட்பட்டிருக்கலாம். ஏனெனில் இன்று கோயிலின் பழைமையான கட்டுமானப் பகுதிகளைக் காண முடியவில்லை. இன்றைய கட்டுமானங்கள் பொது ஆண்டு 16ஆம் நூற்றாண்டில் தோன்றியவையே. இங்குள்ள கல்வெட்டுகளும் இதையே உறுதிப்படுத்துகின்றன. இக்கோயிலின் திருச்சுற்றுச் சுவரில் உள்ளும் புறமும் சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட, துண்டுக் கல்வெட்டுகள் உள்ளன. இவை யாவும் பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. சோழவந்தான், தேனூர் பகுதிகளில் சிதைந்து கிடந்த சிவன் கோயில் கற்களைக் கொண்டுவந்து இங்குக் சுட்டியுள்ளனர். இதில் பிற்காலப் பாண்டியர் மெய்க்கீர்த்திப் பகுதிகளும் சில அரசியல் அதிகாரிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. பொது ஆண்டு 1740இல் ஆர்க்காட்டு நவாப் மற்றும் சந்தாசாகிப் ஆகியோரால் மதுரை கைப்பற்றப்பட்ட போது மீனாட்சி சுந்தரேஸ்வரரையும், கூடலழகரையும் வானரவீர மதுரை என்னும் மானாமதுரைக்கு பக்தர்கள் பாதுகாப்பாகக் கொண்டு சென்றனர். சேதுபதியின் பாதுகாப்புடன் இரண்டாண்டுகள் அங்கு வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் மராத்திய ஆளுநர் முராரிராவ், அப்பாச்சி நாயக்கர் தலைமையில் படை அனுப்பி சேதுபதியின் இசைவுடன் இறைவரை மதுரைக்குக் கொண்டு வந்து அமைத்துக் குடமுழுக்குச் செய்வித்தனர்.
இவ்வகையில் மீனாட்சி கோயிலுக்கு இணையான வரலாற்றுப் பெருமையும் இலக்கியச் சிறப்பும் கொண்ட கூடலழகர், பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்த போதும் இன்றும் நிலைத்து நின்று அருள்பாலிக்கிறார்
காலம்/ ஆட்சியர்
பாண்டியர்கள் மற்றும் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.
தல வரலாறு / கதைகள்
பிரம்மாவின் மகனான சனத்குமாரன் திருமாலை மனித உருவத்தில் வழிபட வேண்டும் என்று ஆசை கொண்டான். எனவே அவன் இவ்விடத்தில் திருமாலை நோக்கித் தவம் இருந்தான். சனத்குமாரன் செய்த தவத்தைக் கண்டு மகிழ்ந்த திருமால், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் அவனுக்குக் காட்சி அளித்தார். அந்தக் கண் கொள்ளாக் காட்சியை அப்படியே வடிவமைக்க விரும்பிய சனத்குமாரன், தேவ சிற்பியான விஷ்வகர்மாவின் உதவியை நாடினார். விஸ்வகர்மாவும் இந்த அரிய காட்சியைச் சிற்பமாக வடித்து அஷ்டாங்க விமானத்தில் பிரதிஷ்டை செய்தார். அதுவே கூடலழகர் கோயில் என்று பெயர் பெற்றது. மதுரை மாநகருக்குக் கூடல் என்று ஒரு பெயர் உள்ளது. எனவே இத்தலத்தில் உள்ள திருமால் கூடலழகர் என்று அறியப்படுகிறார். இக்கோயில் கிருதயுகம், திரேதாயுகம், துவாபர யுகம், கலியுகம் என நான்கு யுகங்களிலும் சிறப்புற்று விளங்கியுள்ளதாகவும் இதனால் இக்கோயில் பெருமாளுக்கு 'யுகம் கண்ட பெருமாள்' என்ற பெயர் வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
தகவல்
முனைவர் துர்கா தேவி
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதனகோபால சுவாமி கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அருகில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெரியார் பேருந்து நிலையம்.
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம்.
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்
மீடியா கோப்புகள் இல்லை
No media Files