அருள்மிகு சுகந்தவனேசுவரர் (எ) ஆண்டபிள்ளை நாயனார் கோயில்
Sugandhavaneswarar /Andapillai Nayanar Temple
மூலவர் பெயர்
சுகந்தவனேசுவரர்
தல மரம்
வன்னி
கோயில் குளம்/ஆறு
திருக்கிணறு
ஆகமம்
சிவாகமம்
பூசைக்காலம்
காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தசாமம் ஆகிய காலங்களில் பூசைகள் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், சனிப்பெயர்ச்சி, அஷ்டமி பூசை ஆகிய சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 7-18ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு / செப்பேடு
இக்கோயிலில் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோயில் கல்வெட்டுகளில் சோணாடு வழங்கியருளிய சுந்தரபாண்டியனின் 14ஆவது ஆட்சியாண்டைக் குறிக்கும் கல்வெட்டே பழமையானது. ’சேத்திரபாலர்’ என்ற பெயரில் இக்கோயில் பைரவரைப் பொது ஆண்டு 11, 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. பூங்குன்ற நாட்டைச் சேர்ந்த மளுவ மாணிக்கம் என்று அழைக்கப்பட்ட குறுநிலத் தலைவர்கள் இப்பைரவர்க்குச் சிறப்பு வழிபாடு செய்வதற்காகப் பல தானங்களை அளித்து வந்திருக்கின்றான். பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டில் இவ்வூர் பெருச்சியூர் என்று பெயர் பெற்றிருக்கிறது. இதே காலத்தில் வீரபாண்டியபுரம் என்ற பெயரிலும் இவ்வூர் விளங்கியிருக்கிறது. இக்காலத்தில் கண்டன் உடையஞ் செய்தான் காங்கேயன் என்ற பாண்டிய மன்னரின் அதிகாரி இப்பகுதியில் சிறப்புப் பெற்ற தலைவனாக விளங்கியுள்ளதைப் பிற்காலப் பாண்டியரது கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இத்தலைவன் மீது பெரியான் ஆதிச்ச தேவன் என்பவன் "பிள்ளைகவி" பாடியதையும் அதற்காக அப்புலவன் நிலங்கள் தானமாகப் பெற்றதையும் இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அதே புலவன் இக்கோயிலில் இளைய நாயனாருக்கும் (சுப்பிரமணியன்) அதிரவீசி ஆடுவாருக்கும் (நடராஜர்) உருவங்கள் செய்வித்துள்ளான் என்று இங்குள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றது. பொது ஆண்டு 1468இல் குருகுலத்தரையன் என்பவன் இங்குள்ள இறைவனுக்கும். இறைவிக்கும் செப்புத் திருமேனிகளைச் செய்தளித்து, அவற்றிற்குப் பூசையும் திருவிழாக்களும் நடைபெற ஏற்பாடு செய்துள்ளான். இதற்காக அவ்வூரைச் சார்ந்த ஊர்ச்சபையினர் அவரைப் பாராட்டிப் பல மரியாதைகள் அளித்துள்ளனர். இவ்வூரில் திருஞானசம்பந்தன் திருமடம், திருநாவுக்கரசன் திருமடம், வீரபாண்டியன் திருமடம் என்ற பல சைவ மடங்கள் பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டில் இருந்திருப்பதைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இவ்வூருக்குச் சிறு பெரிச்சியூர் என்று கல்வெட்டுகளில் பெயர் குறிப்பிடப்படுகின்றது. இக்கல்வெட்டுகள் குறிப்பாகச் சோணாடு வழங்கியருளிய சுந்தரபாண்டியன் காலத்தில் அவைக்களப் புலவராக விளங்கிய காரணை விழுப்பரையர் என்பவரைக் குறிக்கிறது. மற்றும் சிறு பெரிச்சியூரில் உள்ள புலவர்களில் கொடிக்கொண்டான் பெரியான் ஆதிச்சதேவன் என்ற புலவனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இக்கோயிலின் சொத்துக்களாக நஞ்செய் 268 மாவும், அரைமா அரைக்காணி முந்திரியும், புஞ்செய் குறுக்கம் 30 அடங்கிய நிலப்பகுதி எனக் குறிக்கப்பட்ட ஓலைச்சுவடி ஒன்று இவ்வூர்க் கணக்கரிடம் உள்ளது. (இங்கு மா, காணி, முந்திரி என்பது நில அளவைச் சொற்களாகும்.)
சிற்பங்கள்
இக்கோயில் கருவறையில் சுகந்தவனேசுவரர் இலிங்க வடிவில் காட்சி தருகிறார். சாமீபவல்லி அம்மன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ஸ்ரீகாசி வயிரவர் எனப்படும் காலபைரவர் நவபாஷாணப் பைரவராக விளங்குகிறார். வன்னி மரத்து விநாயகர், திருச்சுற்றில் சண்டிகேசுவரர், சைவக் குரவர் நால்வர் சிற்பங்கள், தென்முகக்கடவுளான தட்சணாமூர்த்தி ஆகிய திருவுருவங்கள் வழிபாட்டில் உள்ளன. சனீஸ்வரருக்குத் தனித் திருமுன் (சந்நிதி) அமைந்துள்ளது.
தல வரலாறு / கதைகள்
மதுரையைச் சேர்ந்த வணிகன் ஒருவன் தன் மாமனின் விருப்பப்படி, மாமன் மகளை மணந்து கொள்ள அப்பெண்ணைக் கடற்கரைப் பட்டினத்திலிருந்து அழைத்து வந்து கொண்டிருந்தான். வரும் வழியில் இரவுப் பொழுது ஆகிவிட்ட படியால் பெரிச்சிக் கோயில் எனப்படும் இக்கோயிலில் தங்கினான். இரவில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது அவ்வணிகன் நச்சுப்பாம்பு ஒன்று தீண்டி இறந்தான். அவன் மணம் செய்து கொள்ளவிருந்த அவனுடைய மாமன் மகள் அழுது புலம்பினாள். சிவத்தலங்களைப் பாடிக்கொண்டு சைவ சமயம் எழுச்சி பெறத் தொண்டாற்றி வந்த திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தவேளையில் இப்பெண்ணின் துயர்நிலை கண்டு வருந்திய அவர், வணிகன் உயிர்பெற்று எழவேண்டும் என்று இத்தல இறைவனை நோக்கிப் பதிகம் பாடினார். வணிகனும் உயிர் பிழைத்தான். பின்னர் திருஞானசம்பந்தர் இக்கோயிலில் உள்ள வன்னிமரம், கிணறு, இலிங்கம் இவைகளைச் சாட்சியாக வைத்து வணிகனுக்கும், அவன் மாமன் மகளுக்கும் திருமணம் செய்து வைத்தார். பின்னர் வணிகன் தன் மனைவியை அழைத்துக்கொண்டு மதுரையம்பதியைச் சென்றடைந்தான். அங்கே வணிகனின் முதல் மனைவி இந்தத் திருமணத்தை ஏற்கவியலாது என்று கூறி இளையவளை ஏசினாள். இதனால் துன்புற்ற இளையாள் பொற்றாமரைக் குளத்தில் நீராடி, சோமசுந்தரக் கடவுளிடம் முறையிட்டாள். “நான் என் கணவரை மணம் முடித்துக் கொண்டது உண்மையானால் இப்பொழுதே என் திருமணத்தின் போது சாட்சியாக விளங்கிய வன்னிமரமும், கிணறும், இலிங்கமும் சாட்சியாகத் தோன்ற வேண்டும். இல்லையேல் என் உயிரை மாய்த்துக் கொள்வேன்“ என்று முறையிட்டாள். உடனே மேற்கூறிய சாட்சிகள் மூன்றும் தோன்றி இவளுக்கு இவ்வணிகனுடன் திருமணம் நடந்தது எனப் பறைசாற்றின. திருவிளையாடற் புராணத்தில் இக்கோயிலின் தலபுராணமும் உள்ளது.
இவ்வூரின் பழைய பெயர் மருதூர். பொது ஆண்டு 11ஆம் நூற்றாண்டில் இவ்வூர் ஜெயங்கொண்ட சோழநல்லூர் என்றும் பெயர் பெற்று விளங்கியுள்ளது. பாண்டிய நாட்டில் ஏற்பட்ட சோழ - பாண்டியரது ஆட்சிக் காலத்திலிருந்து இவ்வூர் வரலாற்றுச் சிறப்புடன் விளங்கியிருக்கிறது. இந்தச் சிவன் கோயில் ’மட்டுக்கரை நாயனார் கோயில்’ என்ற பெயரில் சோழர் ஆட்சிகாலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வூர் பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டில் கேரள சிங்க வளநாட்டுத் திருத்தியூர் முட்டத்துச் சிறு பெரிச்சியூர் என வழங்கப்பட்டது. சோணாடு வழங்கிய சுந்தரபாண்டியன் காலத்துச் சாசனம் ஒன்று பெரிய நாச்சியாருக்கு அளித்த நிவந்தத்தை (கோயில் சேவை) விளக்குகிறது. நாளடைவில் பெரிய நாச்சியார் கோயில் என்றே அக்கோயில் பெயர் பெற்றது. அதுவே பெரிச்சிக் கோயில் என்று மருவியதாகச் சொல்லப்படுகிறது.
கோயில் அமைப்பு
இக்கோயில் பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் (1230இல்) கட்டப்பட்ட பிற்காலப் பாண்டியர் கோயிலாகும். இக்கோயில் இப்போது முழுவதும் சீரமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் பண்டைய கட்டடக்கலை எச்சங்கள் அரிதாகவே காணப்படுகின்றன. இக்கோயிலில் உள்ள சதுரவடிவக் கருவறையின் முன் ஒரு நீண்ட மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நந்தி மண்டபமும் உள்ளது. திருச்சுற்றில் சமீபவல்லி, பைரவர், சனீஸ்வரர் ஆகியோருக்குச் சீரமைக்கப்பட்ட புதிய சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுருக்கம்
பெரிச்சிக்கோயில் என்ற கிராமத்தில் அமைந்துள்ள சுகந்தவனேசுவரர் திருக்கோயில் பொது ஆண்டு 7ஆம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலமாகும். இத்தலத்து இறைவன் ஆண்டபிள்ளை நாயனார் என்றழைக்கப்படுகிறார். சாசனத்தில் திருமட்டுக்கரை எனக் குறிக்கப்படும் இந்தப் பழைமையான சிவாலயத்தில் உள்ள அம்பிகையின் பெயர் பெரிய நாச்சியார் ஆகும். இக்கோயில் சிவகங்கை சமஸ்தானத்திற்குரிய தேவஸ்தானக் கோவிலாக விளங்கி வருகின்றது. இக்கோயிலில் நடைபெறும் வயிரவ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருவிளையாடற் புராணத்தில் வன்னிமரமும், கிணறும், இலிங்கமும் சாட்சி சொன்ன புராணம் இத்தலத்தோடு தொடர்புடையது.
கூடுதல் விவரங்கள்
இக்கோயிலிலுள்ள பைரவர் சிற்பம் பொது ஆண்டு 11ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பழைமையான சிற்பமாகும். இன்றும் இவ்வூரில் சிவன் வழிபாட்டோடு பைரவர் வழிபாடும் சிறப்பாக நடைப்பெறுகிறது.
தகவல்
க.த.காந்திராஜன்
குறிப்புகள்
தொல்லியல் கையேடு பக்கம் 54
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
மலையரசி அம்மன் கோயில், கோனாபட்டுக் கொப்புடையம்மன் கோயில், கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சி கோயில், நாச்சியார்புரம் பெரியநாச்சி கோயில்
செல்லும் வழி
கண்டரமாணிக்கம் என்னும் ஊருக்கு அருகே இக்கோயில் உள்ளது. திருப்பத்தூரில் இருந்து 10 கி.மீ. தூரத்திலும், காரைக்குடியில் இருந்து 19 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெரிச்சிக்கோயில், கண்டரமாணிக்கம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
காரைக்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
காரைக்குடி விடுதிகள்
மீடியா கோப்புகள் இல்லை
No media Files